Saturday, September 11, 2010

சிலருக்குத் தெரிந்தது; பலருக்குத் தெரியாதது.




தமிழ்த் தட்டச்சு முறையில் ஒரு பெரும் புரட்சியை (Revolution) அல்லது புத்தாக்கத்தை (Renaissance) ஏற்படுத்தியது,                              என் தம்பி (மர்ஹூம்) உமர் தம்பியின் 'யூனிகோடு' முறை என்று சொல்வதில் மிகையில்லை! தான் உருவாக்கியதை - கண்டுபிடித்ததை, 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' எனும் தமிழிலக்கிய மரபையொட்டி, தமிழுலகம் முழுமைக்கும் தனது அருங்கொடையாக அளித்தார் இச்செம்மல்! இந்த நன்றியுணர்வுதான்,

"நற்குலமாம் 'வாவன்னா' குடும்பத் தோன்றல்
       நாற்புலமும் ஒருங்கிணைந்த அதிரைச் செல்வன்

பொற்குணமுன் மாதிரியைக் கடைப்பி டித்துப்
     புகழ்விரும்பாத் தன்மையிலே சேவை செய்தே

அற்புதமாம் தேனீயாய் மலர்த்தே னுண்டான்
           அகிலத்தார் பலன்பெறவே கணினிக் கூட்டில்

உற்பவமாய் இன்றமிழை இயங்கச் செய்த
       உமர்த்தம்பி வல்லவனை மறக்க லாமோ?"


இன்று, இந்த 'யூனிகோடு' முறையைப் பின்பற்றாத தளமே இல்லை என்னுமளவுக்குப் பெரும்பாலான அனைத்துலகத் தமிழ் இணைய தளங்கள் இம்முறையைப் பின்பற்றிப் பயன்பெற்று வருகின்றன. அண்ணன் - தம்பி உறவு முறையில் இருந்தும், ஒரே ஊரில் பிறந்தும், ஒன்றாகவே வாழ்ந்தும், என் ஆக்கங்களை தட்டச்சாளர் உதவியின்றி நானே பதிவு செய்துகொள்ள முடியாமல் இருந்தேன். அப்போதுதான், என் தமிழ்ப் பேராசிரியர், 'இறையருட்கவிமணி' கா. அப்துல் கபூர் அவர்களின் திருமகனார் அன்புத் தம்பி ஜமால் அவர்கள் எனக்கு தம்பி உமர் தம்பியின் பங்களிப்பில் உருவான (தமிழா ஈ கலப்பை, AWC phonetic unicode writer) இந்த யூனிகோடு தமிழ் தட்டச்சு முறைகளை அறிமுகம் செய்து வைத்தார்.

அன்றிலிருந்து இன்றுவரை, ஏறத்தாழ ஆயிரம் பக்கங்கள் வரை, இம்முறையைப் பின்பற்றித் தட்டச்சு செய்து பயன் பெற்றுள்ளேன். இந்தப் பட்டறிவின் பயனாக, நம் நண்பர்கள் இம்முறையில் செய்யும் பிழைகளைச் சுட்டிக் காட்டவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இக்கட்டுரையை வரையத் தொடங்கினேன்.

'குர்ஆன்' என்று தட்டச்ச வேண்டுபவர்கள், kuraan அல்லது quran என்று பதிவார்கள். அப்போது அது 'குரான்' என்று பதியும்; அல்லது 'ஃஉரன்' என்று பதியும். இதனைச் சரியாகப் பதிய வேண்டுமாயின், kur என்பதற்குப் பிறகு ஓர் இடைவெளியை விட்டுப் பின்னர் aan எனப் பதிந்ததன் பின்னர், இரண்டிற்கும் இடையில் இருக்கும் இடைவெளியை back space செய்தால், அது 'குர்ஆன்' என்று அமைந்துவிடும். 'அப்பாடா! இதற்கு இவ்வளவு விளக்கம் தேவையா?' என்கிறீர்களா? சற்றுக் கூடுதலாகவே தோன்றினாலும், பழக்கத்தில் வரவேண்டும்; வந்துவிட்டால், பிறகு இலகுவாகிவிடும் என்பதே எனது எண்ணம்.

'அண்ணன்-தம்பி' என்று இடைவெளி இல்லாமல் பதியும்போது, 'அண்ணந்தம்பி' என்று பதிவாகும். இதனைப் போக்க இரண்டு சொற்களுக்கும் இடையில் ஒரு இடைவெளி விட்டுப் பதிந்து, பின்னர் back space செய்தால் சரியாகிவிடும். இதில் இன்னொரு பிரச்னை! அதாவது, சில சிஸ்டங்களில் அந்த இடைக்கோடு, 'எ' என்றாகிவிடும். அதை மீண்டும் இடைக்கோடாகத் தட்டச்சு செய்தால் சரியாகிவிடும்.

'தங்கம்' என்று எழுத thangam என்று தட்டச்சுவார்கள். அப்படிச் செய்தால், 'தங்அம்' என்று வரும். இதனைச் சரி செய்ய, thangkam என்று தட்டச்சினால், 'தங்கம்' என்று சரியாக அமைந்துவிடும்.

நண்டு, மண்டு, குண்டு என்றெல்லாம் தட்டச்சும்போது, அது தானாகவே சரியாக அமைந்துவிடும். அன்றி, அது 'ன்டு' என்று பதியாது. 'n' என்ற எழுத்துக்குப் பிறகு 'd' வந்தால், அது தானாகவே 'ண்' என்ற முச்சுழி எழுத்தாகிவிடும். இது, யூனிகோடின் இயல்பாய் அமைந்த தன்மையாகும்.

'ர'கர, 'ற'கர வேற்றுமைகளையும், 'ல'கர, 'ள'கர, 'ழ'கர வேறுபாடுகளையும் தெரியச் சற்றே மொழிப்புலமை வேண்டும். la என்று அடித்தால் 'ல'கரமாகும். Shift 'L' அடித்தால் 'ள்' ஆகும். za அடித்தால் 'ழ'வாகிவிடும்.

Shift 'S' அடித்தால் 'ஸ்' ஆகும். 'sh' அடித்தால் 'ஷ்' ஆகும்.

'கஃபன்' என்பதற்கு, kaqpan என்று அடிக்கவேண்டும். fa உச்சரிப்புக்கு இதுதான் முறை.

'ai' அடித்தால், 'ஐ' ஆகும். 'மை' என்பதற்கு, 'mai' என்று அடிக்கவேண்டும். 'y' என்ற எழுத்து, 'ய'கர ஒற்றாகும்.

ஷிஃப்ட் R அடித்தால் 'ற்' என்றும், ஷிஃப்ட் N அடித்தால் 'ண்' என்றும், ஷிஃப்ட் L அடித்தால் 'ள்' என்றும், ஷிஃப்ட் X அடித்தால் 'ஞ்' என்றும், ஷிஃப்ட் S அடித்தால் 'ஸ்' என்றும் விதிவிலக்குகளாகப் பதியும். இவையன்றி, பெரும்பாலான capital எழுத்துகளுக்கு அதனதன் நெடில்கள் அமையும்.

இப்படியாகப் பலவற்றைக் குறிப்பிட்டுக் காட்டிக்கொண்டே போகலாம். 'சித்திரமும் கைப் பழக்கம்' என்பது போல, தொடர்ந்து இதில் கவனம் செலுத்தினால், விரைவாகவும் நிறைவாகவும் இதில் முன்னேற்றம் அடையலாம். இவையெல்லாம் எனது பட்டறிவில் பட்டவையே. அதில் இடம்பெறாத இன்னும் பல நுணுக்கங்களும் இருக்கலாம். அவற்றை இத்துறை விற்பன்னர்கள் விளக்குவார்கள். சிலர் எழுதும் எழுத்தோவியங்களும் பின்னூட்டங்களும் சில பிழைகளுடன் காணப்படுவதால், இக்கட்டுரைக்கு, 'சிலருக்குத் தெரிந்தது; பலருக்குத் தெரியாதது' என்று தலைப்பிட்டேன். நானே இந்த மென்பொருளில் கற்கவேண்டிய விளக்கங்கள் இன்னும் நிறைய இருக்கக் கூடும். அவற்றை வாசகர்கள் தங்களின் பின்னூட்டங்களில் பகிர்ந்துகொள்வார்கள் என்று நம்புகின்றேன்.

-- அதிரை அஹ்மது
 
தமிழ் தட்டச்சு செய்ய உமர்தம்பி அவர்களின்  AWC PHONETIC UNICODE WRITER,
 
தமிழ் தட்டச்சுக்கு tamil phonetic key board எழுத்துக்கள் உதவி

Wednesday, July 14, 2010

தமிழ் கணினி அறிஞர் "உமர்தம்பி" அரங்க நிகழ்ச்சிகள் part -1

சமீபத்தில நடந்து முடிந்த தமிழ் இணைய மாநாட்டில் தமிழ் கணினி அறிஞர் "உமர்தம்பி" அவர்களின் பெயரிட்ட அரங்கத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சிகளை இங்கு கண்டு ரசிக்கலாம்.

1



2



3



4



5



தமிழ் இணைய மாநாட்டில் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சிகளை படம்பிடித்து YOUTUBEல் வெளிட்டவருக்கு மிக்க நன்றி.

Sunday, June 27, 2010

உமர்தம்பிக்கு விருது - புதிய புகைப்படங்கள் பகுதி - 2

சிங்கப்பூர் தமிழ் அறக்கட்டளை சார்பாக தமிழ் இணைய மாநாட்டில் அதிரை உமர்தம்பி அவர்களுக்கு 'தமிழ் கணினி அறிஞர்' என்ற விருது' வழங்கப்பட்ட செய்தி, மற்றும் புகைப்படங்கள் முந்தைய பதிப்பில் பார்த்தோம். இதோ மேலும் புகைப்படங்கள்

அதிரை உமர்தம்பிக்கு விருது வழங்கப்படும் முன்பு உமர்தம்பி அவர்களின் தமிழ் இணைய சேவை பாராட்டி உமர்தம்பி அவர்களின் குடும்பத்தவர்களை கவுரவிக்கும் புகைப்பட காட்சிகள்.

மேலும் புதிய புகைப்படங்கள் நம் வலைப்பூவில்  விரைவில் வெளியிடப்படும், தொடர்ந்து இணைந்திருங்கள்.

புகைப்படம் உதவி செய்த சகோதரர் கோவை சஞ்சய் காந்திக்கு நன்றி.

மேலும் புகைப்படங்கள் இன்னும் தெளிவாக பார்க்க அதிரைநிருபர் வலைப்பூவிற்கு சென்று பாருங்கள்.

Saturday, June 26, 2010

உமர்தம்பிக்கு விருது - புதிய புகைப்படங்கள் பகுதி - 1

கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் நடக்கும் தமிழ் இணைய மாநாட்டில் அதிரை உமர்தம்பிக்குதமிழ் இணைய அறிஞர்’ என்ற விருது இன்று மாலை 6:00 வழங்கப்பட்டது.

சிங்கப்பூர் தமிழ் அறக்கட்டளை சார்பாக இவ்விருது வழங்கப்பட்டது, தமிழ் இணைய உலகில் பிரபல்யமான தமிழ் இணைய ஆர்வளர் திரு.பாலா பிள்ளை அவர்கள் விருதை வழங்கினார்கள், உமர்தம்பி அவர்களின் மூத்த சகோதரர். அப்துல் காதர் அவர்களும், உமர்தம்பி அவர்களின் மூத்த மகன் மொய்னுதீனும் விருதை பெற்றுக் கொண்டனர்.


உமர்தம்பி அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்த சிங்கப்பூர் தமிழ் சங்கத்திற்கு எங்கள் மனமார்ந்த நன்றி.
புகைப்படம் உதவி செய்த சகோதரர் கோவை சஞ்சய் காந்திக்கு நன்றி.

மேலும் புகைப்படங்கள் இன்னும் தெளிவாக பார்க்க அதிரைநிருபர் வலைப்பூவிற்கு சென்று பாருங்கள்.


உமர்தம்பிக்கு விருது வழங்கப்பட்டது

கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் நடக்கும் தமிழ் இணைய மாநாட்டில் அதிரை உமர்தம்பிக்கு ‘தமிழ் இணைய அறிஞர்’ என்ற விருது இன்று மாலை 6:00 வழங்கப்பட்டது.
                                                                                                                      
சிங்கப்பூர் தமிழ் அறக்கட்டளை சார்பாக இவ்விருது வழங்கப்பட்டது, தமிழ் இணைய உலகில் பிரபல்யமான தமிழ் இணைய ஆர்வளர் திரு.பாலா பிள்ளை அவர்கள் விருதை வழங்கினார்கள், உமர்தம்பி அவர்களின் மூத்த சகோதரர். அப்துல் காதர் அவர்களும், உமர்தம்பி அவர்களின் மூத்த மகன் மொய்னுதீனும் விருதை பெற்றுக் கொண்டனர்.

உமர்தம்பி தம்பி அவர்களின் மகனும், சகோதரரும் துணை முதல்வர் மான்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்களை சந்தித்தார்கள், உமர்தம்பி அவர்களின் தமிழ் சேவையை துணை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பாராட்டினார்கள், உமர்தம்பிக்கு அங்கீகாரம் தர தம்மிடம் நிறைய கோரிக்கைகள் வந்தாகவும் துணை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கூறினார்கள்.

மேலும் விபரங்கள் புகைப்படங்களுடன் விரைவில் வெளியிடப்படும்.
தொடர்ந்து இணைந்திருங்கள்.

Friday, June 25, 2010

உமர்தம்பி அரங்கம் - முதல் புகைப்படங்கள்

தேனீ எழுத்துரு தந்த அதிரை உமர்தம்பி அவர்களின் பெயரில் அரங்கம் தமிழ் இணைய மாநாட்டில் உள்ளது என்பது நாம் அறிந்த செய்தி, அவ்வரங்கத்தின் புகைப்படங்களை பாருங்கள். புகைப்படங்களை பார்த்ததும் எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?







தமிழ் நாட்டில் அதிரையில் பிறந்த உமர்தம்பியை 'துபாய் உமர்தம்பி' என்று பெயரிட்டிருப்பது முதலில் சிறிய வருத்தமாகத் தான் இருந்தது,  துபாயில் இருக்கும் காலத்தில் தான் உமர்தம்பி தமிழ் இணைய மக்களிடம் பிரபல்யமானார்,  உமர்தம்பி மரணித்த போது அவர் துபாயில் இருப்பதாகத் தான் அனேக தமிழ் இணையவாசிகள் எண்ணியிருந்தார்கள், தமிழ் இணைய ஆர்வளர்களிடம் துபாய் உமர்தம்பி என்று அறியப்பட்டதால் 'துபாய் உமர்தம்பி அரங்கள்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக மாநாட்டு அமைப்பாளர்களிடமிருந்து விளக்கம் தரப்பட்டுள்ளது. உமர்தம்பி என்ற பெயர் தமிழ் இணையம் ஒரே ஒரு நபரை மட்டும் தான் ஞாபப்படுத்தும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

Thursday, June 24, 2010

அதிரை உமர் தம்பி – நன்றி மடல்

தமிழ்கணிமைக் கொடையாளர் அதிரை உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்ச்சேவையை அங்கீகரிக்கும் வகையில் முதற்கட்டமாக கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டின் ஐந்து அரங்கங்களில் ஒன்றுக்கு உமர் தம்பி அரங்கு என்று பெயரிடப்பட்டுள்ளது உலகறிந்த செய்தியாகிவிட்ட போதிலும் இவ்விசையத்தில் இதற்காக உண்மையில் உழைத்த தன்னலமற்ற தனிப்பட்ட நபர்கள் முக்கியமாக கூறிப்பிட்டு பாராட்டப்பட வேண்டியவர்கள். உமர் தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்தது விசையத்தில் இறைவனுக்கு தெரியும் யார் உண்மையில் உழைத்து என்று.

அதிரை உமர் தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் அளித்த தமிழக அரசுக்கும், தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கும், துணை முதல்வர் தளபதி மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றி.

இம்முயற்சியில் முழு முயற்சி எடுத்து முதல்வருக்கு கடிதம் எழுதி, துணை முதல்வர் அவர்களின் கவணத்துக்கு எடுத்துச் சென்ற அதிரையை சேர்ந்த அன்பு சகோதரி கவிஞர் மலிக்கா பாருக் அவர்களுக்கும், அவர்களின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்த சகோதரர். வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள். இவர்களின் முயற்சி தொடர்பான முழு விபரங்கள் சகோதரி மலிக்கா அவர்களின் நீரோடை வலைப்பூவில் விபரமாக பதிவாகி உள்ளது.

----------------------------------------------------
தற்போதைய செய்தி ‘துபாய் உமர்தம்பி அரங்கு’ என்ற பெயரை பார்த்ததும் எனக்கு சிறிய வருத்தம், உமர் தம்பி இந்திய குடிமகன், ஒரு தமிழர், இம்மண்ணில் பிறந்து இம்மண்ணில் மறைந்துள்ளார். ‘அதிரை உமர் தம்பி அரங்கு’ என்று போட்டிருக்கலாம், இல்லாவிட்டாலும் தேனீ எழுத்துரு தந்தவரை ‘தேனீ உமர் தம்பி அரங்கு’ என்றாவது போட்டிருக்கலாம்.  ‘சந்தோசத்திலும் துக்கம் இருக்கத்தான் செய்யும்’ என்ற நினைப்புடன் மனதை சமாதானம் செய்து தானே ஆக வேண்டியுள்ளது இக்காலத்தில்.

Monday, June 21, 2010

ஆங்கில இணையத்தளத்தில் உமர்தம்பி பற்றிய செய்தி

Umar Thambi: Forgotten father of Tamil computing
Coimbatore: His creative work has been accepted globally. But, he failed to get due recognition locally even after his death. He is Umar Thambi, the pioneer, who contributed to Unicode by developing fonts for Tamil computing.

Bringing to light Umar's pioneering effort at a press briefing in Coimbatore, M H Jawahirullah, state president, Tamil Nadu Muslim Munnetra Kazhagam (TMMK) said that he had written a detailed letter to Chief Minister M Karunanidhi detailing the contributions made by Umar Thambi for the cause of Tamil computing.

Interestingly, Umar developed the Tamil fonts using Unicode for Tamil computing without any basic collegiate education.

It was Umar Thambi, who took the initiative to take Tamil worldwide through web format. Initially, Tamil remained as palmscripts and later in book form.

His Tamil fonts using Unicode system was well received by netizens across the globe.

Hailing from Adirampattinam in Thanjavur district, Umar was born on June 15, 1953 to Abdul Hameed and Rokkaiyya.

A bright student at Khader Moideen Higher Secondary School at his native place, Umar used to meddle with radio sets since he had a craze for electronics.

After his schooling, Umar left for Dubai in search of greener pastures. Even while working, he spared time to learn the basics of software and later started updating his knowledge on computer technology.

Back home in 2001, Umar devoted himself to software development.

Finally, Umar accomplished the mission of developing the fonts using Unicode for Tamil computing method.

Jawahirullah said that Umar Thambi had worked for the development of Tamil without any government assistance.

It would be a fitting tribute to honour Umar Thambi during the World Classical Tamil meet by instituting awards or education assistance to students pursuing their research in Tamil computing.

D Sekar Annadurai, a Tamil enthusiast and a regular Tamil internetuser, said that Umar's contribution to Tamil computing should not go unrecognised as he had paved the way for others, who are keen in improving Tamil computing taking cue from his initiatives.

Echoing similar views, several admirers from abroad through emails in Tamil internet magazines have appealed to the Tamil Nadu government to recognise Unicode Umar Thambi at the Tamil meet.

Sunday, June 20, 2010

தமிழ் இணைய மாநாட்டு அரங்குகளுக்கு பெயர் சூட்டப்பட்ட தமிழ் இணைய வளர்ச்சியின் முன்னோடிகள்

தமிழ் இணைய மாநாட்டு அரங்குகளுக்கு பெயர் சூட்டப்பட்ட தமிழ் இணைய வளர்ச்சியின் முன்னோடிகள் - சிறு குறிப்பு கீழே:

முரசொலி மாறன்

தமிழ் இணைய மாநாட்டை 1999ம் வருடம் நடத்த பெரு முயற்சி எடுத்துவர்களில் ஒருவர் அமரர் முரசொலி மாறன். இவ்வகையில் தமிழகத்தில் உத்தம நிறுவனத்தை மக்களிடைய பிரபலப்படுத்திய பெருமை இவரைச் சாரும். மின் வழி தமிழ் வளர மென்பொருள் பல தமிழர்களுக்காகத் தயார் செய்திட வழி வகுத்தவர் இவர். தமிழ்நாட்டில் நடந்த இணைய மாநாடுதான் ஒருங்குறி இல்லாத காலத்தில் தமிழ் எழுத்துருக்களைத் தரப்படுத்துவதற்கு வழிகோலியது எனலாம். ஆங்கிலம்-தமிழ் என்னும் இருமொழியில் அமைக்கப்பட்ட தாப் என்னும் எழுத்துருவும் தமிழில் மட்டுமே தட்டச்சு செய்யும் வகையில் அமைக்கப்பட்ட தாம் என்னும் எழுத்துருவும் அமைக்கு இம்மாநாட்டில்தான் வழிவகை செய்யப்பட்டது. அமரர் முரசொலி மாறன் தமிழர்களிடைய மென்பொருள்களின் தரப்படுத்தலுக்கான முயற்சியை வற்புறுத்தியவர். தமிழ் மென்பொருள் உற்பத்தியாளர்களிடைய பலப்பல மென்பொருள்களை உருவாக்க ஊக்குவித்தவர். தமிழகத்தில் மென்பொருள் உற்பத்தியளர்களுக்கு அரசு மூலமாக நிதியுதவிகள் பலவும் செய்து பல சிறந்த தமிழ் மென்பொருள்களை உருவாக்க வழிகோலியவர்.
தமிழ் இணையமும் உத்தம நிறுவனமும் அமரர் முரசொலி மாறன்
அவர்களின் தமிழ்க் கணினித் தொண்டை என்றென்றும் நினைவு கூறும்.

சுஜாதா

சுஜாதா எனும் புனைப்பெயரைக் கொண்ட ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அமரர் ரங்கராஜனை அறியாதோர் தமிழ் இலக்கிய உலகில் இருக்கமுடியாது. தமிழ் இலக்கிய உலகில் ஆணித்தரமான ஒரு இடத்தைப் பெற்ற சுஜாதா கணினி வழி தமிழைப் பயன்படுத்தும் ஒரு சிறந்த பயனாளராக விளங்கினார். இவரின் கணினி ஆர்வம் இவரை அதிக அளவில் தமிழ் நாவல்களை எழுதவைத்தது என்றால் மிகையாகாது. 1997ல் அமரர் நா. கோவிந்தசாமி ஏற்பாடு செய்த தமிழ் இணைய மாநாட்டில் பங்கு கொண்ட சுஜாதா தமிழ் இணைய வளர்ச்சியின் அவசியத்தை நன்கு உணர்ந்தவர்களில் ஒருவராக ஆனார். தமிழகத்தில் இணைய மாநாடு நடக்கவேண்டும் என்னும் உறுதியோடு 1999ம் ஆண்டு தமிழகத்தில் இதை நடத்த வழிகோலினார். முரசு அஞ்சல் எனும் தமிழ்த் தட்டச்சு மென்பொருளை இடையறாது பயன்படுத்தி மற்ற எழுத்தாளர்களிடையே கணினி பயன்பாட்டைப் பற்றியும் தமிழில் கணினி பற்றியும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கணினியின் அற்புதங்களை மையமாக வைத்துத் தமிழில் நிறைய கதைகளை எழுதி தமிழ் வாசகர்களை தமிழ்க் கணினிக்கு ஈர்த்தவர்! உத்தம நிறுவனத்தின் முன்னோடிகளில் பலரோடு இணைந்து பணியாற்றி உத்தமம் ஆரம்ப காலத்தில் வளர வழிவகுத்தவர் அமரர் ரங்கராஜன் அவர்கள். உத்தமம் எனும் நிறுவனம் வளர வேண்டும் என முனைந்து ஆரம்ப காலங்களில் உத்தமத்தின் குழுமத்தில் அடிக்கடி தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டு உத்தம உறுப்பினர்களிடைய ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தினார்.

நா. கோவிந்தசாமி

இணைய முன்னோடிகளில் ஒருவர் என பலராலும் அன்புடன் கூறப்படும் அமரர். நா. கோவிந்தசாமி சிங்கப்பூரில் தமிழாசிரயராகப் பணியாற்றியவர். தமிழ் இலக்கியங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தமிழில் சிறுகதைகள் பல எழுதிய இவர் புலம்பெயர்ந்த தமிழ் இலக்கியவாதிகளின் வரிசையில் இடம்பிடித்தவர். 1946-ஆம் ஆண்டு பிறந்த கோவிந்தசாமி 'உள்ளொளியைத் தேடி', 'வேள்வியைதேடி'. ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவரது நாடகங்கள் பல சிங்கப்பூரில் பிரபலமானவை. சிங்கை வானொலியில் அவர் எழுதிய அன்புக்கப்பால், அலைகள் ஓய்வதில்லை எனும் தொடர் நாடகங்கள் புகழ்பெற்றவை. இணையம் வளர்ந்த காலத்தில் தமிழுக்கு இணையத்தில் ஒரு சிறந்த இடம் வேண்டும் என்ற எண்ணத்துடன் டாக்டர் டான் டின் வீ, லியோங்க கோக் யொங் ஆகிய இரு சீனக் கணினி வல்லுனர்களோடு இணைந்து தமிழ்நெட் எனும் எழுத்துருவைப் படைத்தார். இந்த எழுத்துருவின் பிறப்பு சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில் பல தமிழ் இணையப் பக்கங்கள் பிறக்க வழிகோலியது. ஐஈ விசைப்பலகை எனும் தமிழ்த்தட்டச்சு முறையை அமைத்து தமிழை எளிதாகக் கணினியில் தட்டச்சுச் செய்ய வழியமைத்தார். குறிப்பாக இவரின் முயற்சியில் 1997ம் ஆண்டு முதல் தமிழ் இணைய மாநாடு சிங்கப்பூரில் நடந்தது. பல தமிழ்க் கணினி வல்லுனர்கள் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டனர். இவ்வகையில் தமிழ் இணையமும் உத்தம நிறுவனமும் வளர வித்திட்டவர் நா. கோவிந்தசாமி! அண்ணாரின் இறுதிகாலத் தமிழ்க் கணினி முயற்சி தமிழ் இணையத்தின் முதற்கட்ட வளர்ச்சியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. 1999-ம் ஆண்டு மே மாதம் 25-ம் தேதி மாரடைப்பால் இளம்
வயதில் காலமான நா. கோவிந்தசாமி உத்தமத்தனரின் மனதில் என்றென்றும்
நிலைத்திருப்பார்.

உமர் தம்பி June 15,1953 - July 12,2006

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் உமர் தம்பி. மின்னணுவியலாளரான இவர் தமிழில் ஒருங்குறி படியெடுத்த காலத்தில் தமிழில் முதன் முறையாக எல்லா தளங்களிலும் இயங்கும் WEFT நுட்பத்தின் அடிப்படையிலான 'தேனீ' இயங்கு எழுத்துருவை உமர் தம்பி அறிமுகம் செய்தார். ஒருங்குறியல்லாத WEFT அடிப்படையிலான இயங்கு எழுத்துருக்களைச் சில தமிழ் வலைத்தளங்கள் முன்பே பயன்படுத்தி வந்தன. WEFT அடிப்படையிலான இயங்கு
எழுத்துருக்கள் அந்த எழுத்துரு எந்த தளத்துக்கு உருவாக்கப்பட்டதோ அந்த ஒரு தளத்துக்கு மட்டுமே இயங்குமாறு இருந்தது. மேற்கண்ட இரண்டையும் முதன் முதலில் மாற்றிய பெருமை உமரையே சாரும். தேனீ எழுத்துருவை இயங்கு எழுத்துருவாக (Dynamic Fonts) மாற்றிப் பல்வேறு வலைத்தளங்களில் அதை இலவசமாகப் பயன்படுத்த வழி செய்தார். இன்று தமிழிணைய உலகில் பெரும்பாலானோர் அந்த எழுத்துருவைப் பயன்படுத்தி வலைத்தளம், வலைப்பதிவு செய்து வருகிறார்கள்.
தமிழ் உலகம் ம‌ட‌ற்குழு, தமிழ் மணம், ஈ உதவிக் குழுமம், ஒருங்குறிக் குழுமம், அறிவியல் தமிழ்க் குழுமம் என இணையத்தின் பெரும்பாலான தமிழ்க் குழுமங்களில் பங்கெடுத்துத் தம்மால் ஆன அத்தனை உதவிகளையும் நல்கி இருக்கிறார். உமர் தம்பி அவர்கள் உருவாக்கிய செயலிகளும் கருவிகளும் இன்றளவும் இணையத்தில் அவரின் பங்களிப்புக்குச் சாட்சி சொல்லிக் கொண்டிருக்கின்றன. எல்லா வகையான குறிமுறைகளையும் ஒருங்குறிக்கு மாற்றும் செயலி ஒருங்குறி மாற்றி, தேனீ ஒருங்குறி எழுத்துரு வலைப்பதிவுகள், வலைத்தளங்களுக்கான இயங்கு எழுத்துரு தொடுப்பு வைகை இயங்கு எழுத்துரு என்பனவற்றோடு தமிழா-இ-கலப்பை உருவாக்கத்திலும் பங்காற்றி உள்ளார்.
இப்படியாக தமிழ் இணையத்தோடு இணைந்த உமர் தம்பி அவர் வடிவமைத்துத் தந்த தமிழ் மென்பொருள்கள் மூலம் தமிழ் இணையத்தில் மங்காப் புகழை எய்தியவர்!
யாழன் சண்முகலிங்கம்

அப்பு ஆர்ச்சி என அன்பாக அழைக்கப்பட்ட அமரர் யாழன் சண்முகலிங்கம் இலங்கையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தமிழ் இலக்கியவாதி மற்றும் மென்பொருள் பொறியியலாளரான இவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பல ஆண்டு காலம் பணியாற்றி அமெரக்கப் பிரஜை உரிமை பெற்று அங்கிருந்தே தனது தமிழ்த் தொண்டை ஆற்றினார். இவருடைய மிக முக்கியமான தமிழ் மென்பொருள் யாழன் தமிழ்ச் சொற்பகுப்பியாகும். இம்மென்பொருளை ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொன்னூற்றைந்தாம் ஆண்டிலேயே எழுதி அதை உலகலவில் தமிழர்களிடையே பிரபலப்படுத்தினார். இது தமிழ்வலை99 என்ற மென்பொருளுக்கு முன்னதாகவே எழுதப்பட்டது. இந்த வகையில் தமிழர்களிடையே தமிழைக் கணினியில் பயன்படுத்த முயற்சி செய்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றார். தமிழ் எழுத்துரு வளராத நாட்களில் தமிழைக் கணினியில் பயன்படுத்த போதுமான வசதி இல்லாத நாட்களில் இணைய வளர்ச்சி தொடக்க்க் காலத்தில் இருந்த நாட்களில் ஒரு எளிமையான பலரும் பயன்படுத்தும் வகையில் ஒரு மென்பொருளைச் செய்து அதை தமிழர்களின் மத்தியில் பிரபலப்படுத்தியது மிகச் சாதனை என்றுதான் கூறவேண்டும். யாழன் விசைப்பலகையை இவர் 1993ம் ஆண்டு உருவாக்கி அதை தமிழர்களுக்கு அர்ப்பணித்தது தமிழ் இணைய வளர்ச்சியின் முக்கியமான காலகட்டங்களில் ஒன்று எனலாம்.

நன்றி: உத்தமம்

Wednesday, June 16, 2010

உமர்தம்பி பெயரில் விருது - சிங்கப்பூரில்

தேனீ உமர்தம்பி அவர்களின் பெயரில் விருது சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக சென்ற மாதம் விருது வழங்கப்பட்டது இது பற்றிய செய்தியை இங்கு மீண்டும் என் வலைப்பூவில் பதிவு செய்வவதில் பெருமையடைகிறேன்.


சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி திரட்டி இணையதளம் இணைந்து நடத்திய மணற்கேணி 2009 நிறைவு விழா இன்று(மே 28,2010) மாலை சிங்கப்பூர் லிட்டில் இந்தியா ஆர்கெட் அருகில் உள்ள அப்பல்லோ பனானிலீஃப் உணவகத்தில் மாலை 6.00 மணியிலிருந்து கலைக்கட்டியது.

விழாவின் முக்கிய நிகழ்வாக மணற்கேணி 2009 சிறந்த கட்டுரைகள் எழுதி வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு (திரு.தருமி, திரு.பிரபாகர் மற்றும் திரு.தேவன்மாயம்) விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகள் வலைப்பதிவில் செயல்பட்டும் இணையத் தமிழ்வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் இருந்து தற்போது மறைந்துவிட்ட தேனி எழுத்துறு தந்த தேனி உமர் தம்பி, தேன்கூடு திரட்டி உருவாக்கி மாதம் தோறும் சிறுகதைகள் போட்டி நடத்தி தமிழ்பதிவர்களை ஊக்குவித்த திரு.தேன்கூடு சாகரன், கேன்சருடன் ஒரு யுத்தம் நடத்திக்கொண்டே தமிழ் வலையுலகில் கேன்சர் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் எழுதிய திருமதி.அனுராதா சுப்ரமணியன், தமிழ் கணிமை இணைய வளர்ச்சியில் பங்காற்றிய திரு.சிந்தாநதி அவர்களின் நினைவாக வழங்கப்பட்டது.

இந்த மாபெரும் விழாவை திரு.மா.அன்பழகன்,திருமதி சித்ரா ரமேஷ், திருமதி ஜெயந்தி சங்கர்,  திரு விஜயபாஸ்கர், திரு.இராமகண்ணபிரான், திரு.பாண்டியன்,  திரு.கவி, கவிஞர் பாலுமணிமாறன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் சிங்கப்பூர் வலைப்பதிவர்கள், வாசகர் வட்டம் உறுப்பினர்களும் கலந்துகொண்டு விழா சிறக்க துணையாக இருந்தார்கள். விழாவின் முடிவில் உணவும் வழங்கப்பட்டது.

நன்றி அம்மா அப்பா வலைப்பூ

தன்னலம் விரும்பாத தாய்தமிழ் தொண்டர் தேனீ உமர்தம்பி பெயரில் விருது வழங்கி சிறப்பித்த சிங்கப்பூர் வலைப்பதிவர்கள், தமிழ்வெளி திரட்டி இணையதளம் மற்றும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் உமர்தம்பி குடும்பத்தார், நண்பர்கள் அதிரைவாசிகளின் சார்பாக அன்பான நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். உங்களின் தமிழ் சேவை இவ்வுலகம் இருக்கும் நாள் வரை தொடர எங்கள் வாழ்த்துக்கள்.
 
இச்செய்தியை மீண்டும் எனக்கு ஞாபகப்படுத்திய அன்பு சகோதரர் ஜோசப் பால்ராஜ் அவர்களுக்கு மிக்க நன்றி.

Tuesday, June 15, 2010

உமர்தம்பி - பிறந்ததினம் இன்று..

கணிணியில் தமிழைத் தடங்கின்றி தட்டச்சிட உதவும்வகையில் தேனீ எழுத்துருவை அனைவரும் பயன்படும் வகையில் உருவாக்கித் தந்தவரான தேனீ உமர்தம்பி பிறந்த தினம் இன்று (15-06-2010).

இச்செய்தியை இன்று காலை வெளியிட்ட சுவரொட்டி வலைப்பூவிற்கு மிக்க நன்றி

Sunday, June 13, 2010

உமர்தம்பிக்கு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் முதல் அங்கீகாரம்

தேனீ எழுத்துரு தந்த தமிழ் இணைய மக்களால் யுனிகோட் உமர் என்று அன்போடு அழைக்கப்படும் அதிரை   உமர்தம்பிக்கு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் முதல் அங்கீகாரம் கிடைத்த செய்தி முதலில் நண்பர்கள் மற்றும் INFIT  இணையம் மூலமாகவும் அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி.

தமிழ்கணிமைக் கொடையாளர் உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்ச்சேவைய அங்கீகரிக்கும் வகையில் முதற்கட்டமாக கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டின் ஐந்து அரங்கங்களில் ஒன்றுக்கு உமர்தம்பி அரங்கு என்று பெயரிடப்பட்டுள்ளது

இந்த அங்கீகாரத்திற்கு வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் உமர்தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க ஆதரவு குரல் தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

உமர்தம்பி அங்கீகார செய்தி வேண்டுகோளை மீண்டும் மீண்டும் இணையத்தில் வெளியிட்டு தமிழ் இணைய ஆர்வளரர்களுக்கு ஞாபகப்படுத்தி வந்த அனைத்து வலைபூக்களுக்கும் மிக்க நன்றி.

உமர்தம்பிக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று தங்கள் தளங்களில்
செய்திகள் வெளியிட்ட தமிழ்மணம், விகடன் இணையத்தளங்களுக்கும்
மிக்க நன்றி.

இத்தருணத்தில் இம்முயற்சியில் முக்கிய பங்களித்த நன்றி   மறவாத
உமர்தம்பி அவர்களின் இணைய நண்பர் அவர்களுக்கு மிக்க நன்றி
அவரிடம் அனுமதி வாங்கிய பிறகு அவருடைய பெயரை வெளியிடுகிறேன்.

உத்தமம் அமைப்புத் தலைவர், நிர்வாகிகள் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும். உலகத் தமிழ் மாநாட்டில் உத்தமம் அமைப்பின் அனைத்து செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு அளித்து வரும் தமிழக
அரசுக்கும், தமிழ முதல்வர் அவர்களுக்கும், துணை முதல்வர்கள் அவர்களுக்கும் மிக்க நன்றி.

இம்முயற்சியில் தனிப்பட்ட கவணம் செலுத்தி தமிழக முதல்வர் அவர்களுக்கு கடிதம் எழுதி, அரசின் கவணத்துக்கு எடுத்திச் சென்ற தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கும், தமுமுக சகோதரர்கள் அனைவருக்கும் எங்களின் அன்பான நன்றி.

இறுதியாக இம்முயற்சியில் முழு கவணம் செலுத்தி தமிழக முதல்வர்களுக்கு கடிதம் எழுதி,  துணை முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களின் கவணத்துக்கு எடுத்துச் சென்ற அதிரை கவிஞர் சகோதரி 'அன்புடன் மலிக்க' அவர்களுக்கும், அவரின் முயற்சிக்கு பெருதவி செய்த அன்பு சகோதரர் திரு. காஞ்சி முரளி அவர்களுக்கும், திருவாரூர் வழக்கறிஞர் திரு. அசன் முகமது ஜின்னா  அவர்களுக்கும்  எங்களின் அன்பான கோடான கோடி நன்றிகள்.

வரும் நாட்களில் உமர்தம்பிக்கு அங்கீகாரம் தொடர்பாக இன்னும் பல நல்ல செய்திகளை எதிர்ப்பார்த்தவனாக விடைப்பெறுகிறேன்.

தாஜூதீன்

Thursday, May 27, 2010

என்னால் சாதிக்க முடிந்தது, ஏன் உங்களால் முடியாதா?

இந்த ஆண்டு 10 வகுப்பு பொது தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த மாணவி சகோதரி ஜாஸ்மினுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள், இச்சகோதரிக்கு ஊக்கம் அளித்த பெற்றோருக்கும், பள்ளி ஆசிரியர்களும் என்னுடைய பாராட்டுக்கள். சகோதரி ஜாஸ்மினுடைய சாதனை நம்மை மிக ஆழமாக சிந்திக்க வைக்கிறது, நம் ஏழை, நடுத்தரப் பிள்ளைகளாலும் எந்த சாதனையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை தந்துள்ளார் சகோதரி ஜாஸ்மின். ஹிஜாபுடன் அச்சகோதரியின் புகைப்படத்தை பார்க்கும் போது உண்மையில் எல்லையற்ற மகிழ்ச்சி. என்னால் நம்ப முடியவில்லை, இது நிஜம் தானா என்று. ஹிஜாபையும், பர்தாவை கேவலப்படுத்தி வரும் மேல் நாட்டு கலாச்சாரவதிகளின் முகத்தில் கரி பூசி இருக்கிறார் சகோதரி ஜாஸ்மின். எல்லாம் அல்லாஹ்வின் செயல், அவன் நாடினால் எந்த வெற்றியை நம் சமுதாயத்தால் படைக்க முடியும்.

நெல்லை டவுணில் உள்ள மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி சகோதரி ஜாஸ்மின் 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ள நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சகோதரி ஜாஸ்மினின் தந்தை சேக் தாவூத் ஊர் ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். அவரது தாய் நூர்ஜஹான். மாணவி சகோதரி ஜாஸ்மினுக்கு இம்ரான் என்ற அண்ணனும், இர்பான் என்ற தம்பியும் உள்ளனர். இவர்களில் இம்ரான் கூலி வேலை செய்து வருகிறார். இர்பான் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். எவ்வளவு எழிமையான குடும்பம்.

சகோதரி ஜாஸ்மின் சிறுவயதிலிருந்தே மிகவும் ஆர்வமாக படித்து வருகிறார். மகளை அதிக செலவு செய்து தனியார் பள்ளியில் படிக்க வைக்க வசதி இல்லாத காரணத்தால் நெல்லை டவுணில் செயல்பட்டு வரும் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். தனது குடும்ப நிலையை உணர்ந்த சகோதரி ஜாஸ்மின் சிறந்த முறையில் படித்து அனைத்து வகுப்பிலும் முதல் மாணவியாக திகழ்ந்து வந்தார். சகோதரி ஜாஸ்மின் முதல் வகுப்பிலிருந்து தற்போது வரை நெல்லை டவுண் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியிலேயே படித்து வந்தார்.

பணம் இருந்தால்தான் படிக்க முடியும், தனியார் பள்ளியில் படித்தால்தான் நிறைய மதிப்பெண்கள் வாங்க முடியும் என்று ஒரு மாயை தமிழ்நாட்டில் உள்ளது. அந்த மாயத்தோற்றத்தை இன்று உடைத்தெறிந்து இருக்கிறார் நெல்லை மாணவி சகோதரி ஜாஸ்மின். படிப்பில் முதன்மை பெறுவதற்கு, ஆர்வமும், விடா முயற்சியும் இருந்தாலே போதும் என்று சகோதரி ஜாஸ்மின் எடுத்துக்காட்டி உள்ளார்.

இவை மட்டுமின்றி தமிழக கல்வி வரலாற்றில் இன்னொரு அசாத்திய சாதனையையும் சகோதரி ஜாஸ்மின் புரிந்துள்ளார். மாநகராட்சிப்பள்ளி என்றாலே, கல்வித்தரம் இருக்காது என்று இளக்காரமாக நினைக்கும் மனோபாவம் உள்ளது. அதற்கு சகோதரி ஜாஸ்மின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தனது மகளின் சாதனைப் பற்றி சகோதரி ஜாஸ்மினின் தகப்பனார் ஷேக்தாவூத் கூறியதாவது: எனது குழந்தைகளை நன்கு படிக்க வைத்து அவர்களை சமுதாயத்தில் உயர்ந்தவர்களாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் படிக்க வைத்து வருகிறேன். அதற்கு ஏற்றாற்போல் மகள் ஜாஸ்மின் சிறப்பாக படித்து வருகிறாள். அவள் தொடக்கத்திலிருந்தே படிப்பில் மிகவும் ஆர்வம் காட்டியதால் அவள் படிப்புக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படாத வகையில் சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்தோம். பத்தாம் வகுப்பிற்கு வந்ததும் டி.வி. பார்க்கும் பழக்கத்தை விட்டு விட்டாள். டியூஷனுக்கு எங்கும் செல்லவில்லை. அன்றைய பாடங்களை அன்றே படித்து வந்ததால் சாதனை படைத்துள்ளார். அவளது விருப்பப்படி படிக்க வைப்பேன்.

தனது வெற்றி பற்றி சகோதரி ஜாஸ்மின் கூறியதாவது:- மாநில அளவில் சாதனை படைக்க கடினமாக படித்தேன். 498 மதிப்பெண்கள் பெறுவேன் என எதிர் பார்த்தேன். சமூக அறிவியலில் 2 மதிப்பெண்கள் குறைந்து விட்டதால் அதனை பெற முடியவில்லை. பெரிய பள்ளியில் படித்தால்தான் சாதிக்க முடியும் என்றனர். ஆனால் எங்கள் பள்ளி சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை அல்லாஹ்வின் கிருபையால் நடந்தது. ஆசிரியர்கள் சிறந்த முறையில் பயிற்சி அளித்து எனக்கு ஊக்கமளித்தார்கள். தினமும் காலையிலும், மாலையிலும் படிப்பேன். அன்றைய பாடங்களை அன்றே தவறாமல் படித்து விடுவேன். இரவு 1 மணி வரை படிப்பேன்.

10-ம் வகுப்புக்கு வந்த பிறகு டி.வி பார்க்க மாட்டேன். எனது குடும்பம் நடுத்தர குடும்பம். தற்போதும் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம். கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படிக்க ஆசைபடுகிறேன். அதன் பிறகு ஐ.ஏ.எஸ் முடித்து கலெக்டராகி மக்களுக்கு சேவை செய்வேன்.


எங்கே செல்கிறது நம் பாதை? என்று பல வசதி வாய்ப்புகள் உள்ள நம்மூர் மாணவர்களும் பெற்றோர்களும் சுயபரிசோதனை செய்து சிந்திக்க வேண்டாமா?

ஊர் ஊராக ஜவுளி வியாபரம் செய்து வரும் சேக்தாவுத் அவர்கள் தன் பிள்ளைகள் சமுதாயத்தில் நல்ல நிலையில் வரவேண்டும் என்று பல கஷ்டங்களையும் தாங்கி படிக்க வைத்து தன் பெண்ணை சாதனை படைக்க வைத்திருக்கிறாறே ஏன் நம்மாலும் நம் பிள்ளைகளை சாதனை படைக்க வைக்க முடியாதா என்ன?

பணம் இருந்தால் தான் நல்ல தனியார் பள்ளியில் படிக்க முடியும், அதிக மதிப்பெண்கள் முதல் மதிப்பெண் எடுக்க முடியும் என்ற எட்டாக்கனியை மாநகராட்சி பள்ளியில் படித்து சகோதரி ஜாஸ்மின் எட்டிப்பிடித்துள்ளார். எல்லாவசதிகளும் இருக்கும் நம் பிள்ளைகளால் அக்கனியை ஏன் எட்டிப்பிடிக்க முடியாதா என்ன?

வசதி வாய்ப்புகளும் தொழில்நுட்பங்களும் குறைவாக உள்ள அரசு மாநகராட்சிப் பள்ளி மாணவி மாநில அளவில் சாதனை படைக்க வைத்திருக்கிறது, இப்பள்ளியை விட சில வசதி வாய்ப்புகள் உள்ள நம்மூர் பள்ளிகளால் ஏன் நம் மாணவர்களை சாதனை படைக்க வைக்க முடியாதா என்ன?

10 ம் வகுப்பு படிக்க ஆரம்பித்திலுருந்து தொலைகாட்சி பார்பதில்லை, IAS படித்து இச்சமுதாயத்திற்காக சேவை செய்ய வேண்டும் என்று லட்சியக் கணவுடன் கூறியிருக்கிறார் சகோதரி ஜாஸ்மின், சிறு வயதிலிருந்து குறிக்கோள் மற்றும் லட்சியத்தையும் மனதில் நிறுத்தி நம் பிள்ளைகளை இவ்வுலகில் பல சாதனைகள் செய்ய வைக்க முடியாதா என்ன?

சகோதரி ஜாஸ்மின் பத்திரிக்கைகளுக்கு அளித்து வரும் செய்திகளை (குறிப்பாக, அதிகம் டிவீ பார்ப்பதில்லை என்ற செய்தியை) நம் பிள்ளைகளுக்கு எடுத்துக்காட்டுங்கள், வீட்டில் உள்ள தாய்மார்களுக்கும் எடுத்துக்காட்டுங்கள், பிள்ளைகளை நல்ல மேல் படிப்பு படிக்க வையுங்கள் குறிப்பாக நம் பெண் மக்களை.

நம் சமுதாயப் பிள்ளைகள் படிப்பில் சாதனைப்படைக்க ஆரம்பித்துள்ளார்கள் என்பதை இவ்வாண்டு 12 ம் & 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இவ்வுலக்கு எடுத்துக்காட்டுகிறது. சகோதரி ஜாஸ்மினை ஒரு ரோல் மடலாக வைத்து நம் பிள்ளைகளை கடின முயற்சி செய்து சமுதாயத்தில் நல்ல நிலைக்கு அவர்களை வரவைத்து, நம் சமுதாயத்திற்கு,  நம் நாட்டிற்கு சேவை செய்து சாதனைப் படைக்க ஒரு நல்ல பாதை அமைக்க நாம் அனைவரும் சபதம் எடுப்போம். இச்சமுதாயம் முன்னேற்றத்தை கல்வியால் மாடுமே நாம் எட்டமுடியும். சாதனைகளை எல்லா சமுதாயத்தாலும் எட்டிப்பிடிக்கும் நிலை இன்று முதல் ஆரம்பம், நிச்சயம் கல்வியில் நல்ல போட்டிகளுடன் நல்ல நல்ல திறமைசாலிகள் தமிழகத்தில் வருவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

10 வகுப்பில் வெற்றி பெற்ற அனைத்து சகோதரி, சகோதரர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களும், பிராத்தனைகளும்.

அதிரை தாஜூதீன்

tjdn77@gmail.com

நன்றி: http://www.tmmk.in/ & http://www.maalaimalar.com/

Saturday, May 08, 2010

உமர்தம்பிக்கு அங்கீகாரம் – யூத்புல் விகடன்

உமர்தம்பியின் இணையத் தமிழ் சேவைக்கு அங்கீகாரம் கிடைக்க தமிழ்மணத்தை தொடர்ந்து விகடன் இணையமும் செய்தி வெளியிட்டுள்ளது மிக்க மகிழ்ச்சி.


இத்தருனத்தில் விகடன் நிறுவனத்தாருக்கும்,  யூத்புல் விகடன் ஆசிரியர் குழுவுக்கும், ஊழியர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

வாழ்க உங்கள் தமிழ் தொண்டு.




அன்புடன் தாஜூதீன்

யூனிகோடு உமர் by திரு. சுரதா யாழ்வாணன்

மறைந்த தமிழ் கணினி ஆசான், தேனீ எழுத்துரு தந்த அதிரை "உமர்தம்பி" அவர்கள் பற்றி தமிழ் கணினி மேதை மரியாதைக்குறிய "திரு.சுரதா யாழ்வாணன்" அவர்கள்  பாராட்டி 15  ம் ஆகஸ்ட் 2006ம் ஆண்டு வெளியிட்ட செய்தியை இங்கு மீண்டும் இணையத் தமிழார்வளர்களுக்கு பகிர்ந்துக்கொள்கிறேன்.

வழமைபோல் தமிழ் மணத்தில் ப்ளோக்கர் நாட் பதிவுகளை பார்த்துக்கொண்டு வந்தபோது அந்த செய்தி கண்ணில் பட்டது. "உமர் மறைவு" பற்றிய செய்தி அது. சற்று திக்கித்து சுதாகரித்து சுட்டியை க்ளிக் பண்ணுவதற்குள் மனதுக்குள் ஆயிரம் எண்ணங்கள் ஓடி மறைந்தன..

என்னவாயிற்று துபாயில்தானே இருந்தார். ஏதாவது விபத்தாகவிருக்குமே?..மத்தியகிழக்கு நாடுகளில் வேலையிலிருப்போர் விபத்து மரணம் என அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறேன். அதைவிட அண்மையில் தான் கார்த்திகேயன் என்று ஒரு வலைப்பதிவர்கூட பெங்களுரில் விபத்தில் பலியாகியிருந்தார்.எனவே பல எண்ணங்கள்.

பின்னர் அந்த மறைவு பற்றிய முப்தியின் பதிவைப் பார்த்த போது கூட அதில் ஆரம்பத்தில் மறைவு தவிர வேறு போதிய விபரம் கிடைக்கவில்லை. ஆனால் உமர் என்ற தமிழ்க்கணனி ஆர்வலனின் இடம் வெற்றிடமாகியது என்ற செய்தி மட்டும் காணப்பட்டு மனதுக்குள் உறைத்தது.

நானும் மற்றவர்களைப்போலத்தான் உமருடன் தமிழ் செயலி தொடர்பான மடல் தொடர்பு வைத்திருந்தேன். ஒரு முறை அவரை தேனி தானியங்கி எழுத்துரு தொடர்பாக பாராட்டி ஒரு மடலிட்டிருந்தேன்.

அப்படி நான் பாராட்டக்கூடியவாறு உமர் என்னதான் சாதனை செய்திருந்தார்?

அநேக வலைப்பதிவர்கள் உமரின் தானியங்கி எழுத்துருவை பாவிப்பவர்கள். அதை அவரது மறைவு பற்றிய பதிவில் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் உண்மையில் தானியங்கி எழுத்துரு செய்வது சுலபம். ஆனால் உமர் செய்தது அது அல்ல, தானியங்கி எழுத்துரு அமைக்கும்போது அந்த microsoft/weft செயலி ஒவ்வொருமுறையும் அது எந்த இணையத்தளத்திலிருந்து செயல்படவிருக்கிறது என கண்டிப்பாக கேட்கும். உதாரணமாக திசைகள்.கொம் என கொடுத்திருந்தோமேயானால் அது தில்லை.கொம் என்ற தளத்திற்கு இயங்காது. இதை ஆரம்பத்தில் கவனித்த நான் முகவரிக்குப்பதிலாக http://எனப்போட்டு அந்த ஆரம்பத்தில் வரும் அத்தனை முகவரிகளுக்கும் அந்த தானியங்கி எழுத்துரு இயங்கும் வண்ணம் முயற்சித்தேன், ஆனால் அது சரிவரவில்லை. இதே எண்ணம் உமர் மனதிலும் தோன்றி அதே http:// செயல்பாட்டை நிறுவி தேனி

எழுத்துருவை அனைத்து தளங்களிலும் அதாவது http://என ஆரம்பிக்கும் அத்தனை முகவரிகளுக்கும் செயல்படுமாறு அந்த செயலியை உடைத்து (hack) நடைமுறைப்படுத்தியிருந்தார் உமர். அவரது இந்த உத்தியைதான் நான் மிக வெகுவாக மெச்சி பாராட்டியிருந்தேன்.அதற்கு அவர் தன்னடக்கமாக எனது தானியங்கி எழுத்துரு e-lesson பற்றி சிலாகித்து மேலதிகமாக பாராட்டியிருந்தார்...


இதே போல் இன்னுமொரு சம்பவம் எல்லோரும் அன்று தமிழிற்கு யூனிகோடுதான் சரியானவழி என முனைப்பாயிருந்தார்கள்.ஆனால் அதை பலரும் பயன்படுத்தக்கூடிய வழியில் செயல்படுத்தவைக்க தயாராகவிருக்கவில்லை. கிடைக்கக்ககூடிய எழுத்துருவோ ஒன்றில் வர்த்தக நோக்கில் பணம் கட்டி வாங்கும் எழுத்துருவாகவிருந்தது அல்லது எழுத்து சீர்திருத்தமுறையில் அமைந்திருந்தது. இந்த நிலமையில்தான் யூனிகோட்டை சரளமாக எல்லோரும் பாவிக்கும் வண்ணம் செய்வதற்காக தமிழில் இதற்கான எழுத்துரு தேவை என மடலாடற்குழுக்களில் வர்த்தக எழுத்துருக்களை தவிர்த்து யூனிகோட் எழுத்து தேவை என நான் தேடும்போது சில வாரங்களில் உடனடியாக தனது தேனீ எழுத்துருவை உருவாக்கி இலவசமாக தமிழ்க்கணனி உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

இன்று பல யூனிகோட் எழுத்துருக்கள் அரசு ஆதரவுடனும் தனிப்பட்ட பலரது சேவை நோக்கத்துடனும் வந்துவிட்டன. ஆனால் அன்று உமர் காலமறிந்து ஆபத்பாந்தவனாக வெளியிட்ட தேனி எழுத்துரு இன்றுவரை நிற்கின்றது.

அதே போல் அன்று அந்த வசதி உமர் தந்திருக்காவிடில் தமிழில் யூனிக்கோடின் பாய்ச்சல் சற்று தாமதப்பட்டிருக்கும் என்று சொன்னாலும் மிகையல்ல..

இன்னொரு எழுத்துருவாக்க அன்பர் ஒருவர் தனது எழுத்துருவை யூனிகோட் முறைமைக்கு மாற்ற என்னிடம் தொடர்பு கொண்டபோது உமரைத்தான் நான் சுட்டிவிட்டிருந்தேன். பின்னர் உமரின் உதவியுடன் அது வைகை யூனிகோட் எழுத்துருவாகியது. அதுகூட இலவசமாகத்தான் வெளியாகியது.

இதன் பின்னர் உள்ள உழைப்பு, ஆர்வம் பயனாளிகளுக்கு ஒருபோதுமே தெரியவராது. ஆனால் இந்த உழைப்பு வீண்போகவில்லை என்பதை உமரின் பிரிவின் பின் அவருக்கு அஞ்சலி செலுத்திய வலைப்பதிவர்கள் நிருபித்திருக்கிறார்கள். இனி இந்த கணனி உழைப்பாளி திரும்பவரப்போவதில்லை.

ஆனால் நாளை..

உமர் உருவாக்கிய அத்தனை செயலிகளும் காலவோட்டத்தில் உபயோகமாகாமல் போகலாம். ஆனால் உமர் என்ற இந்த தமிழ்த்தொண்டனின் அந்த தமிழார்வ, கணனி உழைப்பு , சேவை அடுத்து வரும் தமிழ்கணனி ஆர்வலர்களுக்கு ஒரு உதாரணமாகத்திகழ்ந்து அவர்களும் இதேபோல் வீச்சுடன் தமிழுக்கு சேவை செய்ய ஒரு உந்துதலாகவிருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

பி.கு எனக்கு இன்றுள்ள ஒரே மனச்சங்கடம் உமருடன் ஒருவேளையாவது
தொலைபேசியிருக்கலாமே என்பதுதான்.

-சுரதா யாழ்வாணன்-

நன்றி: http://www.yarl.com/forum3/index.php?showtopic=12890

Tuesday, May 04, 2010

யார் இந்த உமர்த்தம்பி?

கருங்குயிலும் காகமதும் ஒன்றாய்த் தோன்றும்(1)
காதுடையோர்(2) இன்னிசையால் குயிலைத் தேர்வார்

அருங்கருணை ஆண்டவனின் அன்பைத் தேக்கி
அகமுவந்து நற்றமிழின் மக்க ளெல்லாம்

பெரும்பயனை அடைந்திடவே 'தேனீ' யென்னும்
பெயர்சூட்டித் தட்டச்சில் வார்த்தெ டுத்தே

ஒருங்குறியாம் 'யூனிக்கோ' டெழுத்தைத் தந்த
உமர்த்தம்பி வல்லவனை மறக்க லாமோ?

******

நற்குலமாம் 'வாவன்னா' குடும்பத் தோன்றல்
நாற்புலமும்(3) ஒருங்கிணைந்த அதிரைச் செல்வன்

(4)பொற்குணமுன் மாதிரியைக் கடைப்பி டித்துப்
புகழ்விரும்பாத் தன்மையிலே சேவை செய்தே

அற்புதமாம் தேனீயாய் மலர்த்தே னுண்டான்
அகிலத்தார் பலன்பெறவே கணினிக் கூட்டில்

உற்பவமாய்(5) இன்றமிழை இயங்கச் செய்த
உமர்த்தம்பி வல்லவனை மறக்க லாமோ?

******

இளமையிலே நுண்ணறிவைப் பெற்ற தம்பி
இயங்காத கருவிகளைப் பழுது பார்ப்பான்

எளிமையுடன் அடுத்துள்ள பட்டுக் கோட்டை
ஏகிடுவான்; அங்கவற்றை இயங்க வைப்பான்

களிகொள்வார் கருவிகளின் உடைமைக் காரர்
காசளித்தால் வாங்கமாட்டான்; நன்றி ஏற்பான்

ஒளிகொடுக்கும் முழுமதிபோல் பயனைத் தந்த
உமர்த்தம்பி வல்லவனை மறக்க லாமோ?

******

திறமையுடன் செயலாற்றி வறுமை போக்கத்
தேர்ந்தெடுத்தான் அமீரகத்தை; அங்கி ருந்து

மறுமையுடன் இம்மையையும் சேர்ந்து பெற்று
மகிழ்வோடு தன்வாழ்வை அமைத்து யர்ந்து,

பொறுமையுடன் நுண்ணறிவை வளர்த்துக் கொண்டு
புகழ்வாய்ந்த கணினிகளுள் புகுந்து மேய்ந்தான்

ஒறுமையிலாத்(6) தன்மையுடன் உயர்ந்து நின்ற
உமர்த்தம்பி வல்லவனை மறக்க லாமோ?

******

கடைந்தெடுத்த வெண்ணெயினைப்(7) பல்லோ ருக்கும்
காசில்லாக் கொடையாகக் கொடுத்த சீலன்

அடைந்ததுவோ உயிர்கொல்லிப் புற்று நோயாம்!
அதனைத்தான் பொறுமையுடன் சகித்து வந்தான்

குடைந்ததுநோய் அவனுடலை; இயன்ற மட்டும்
குணப்படுத்தச் சிகிச்சையெலாம் செய்து பார்த்தான்

உடைந்ததுவே (8)உயிர்ப்பானை! பாவம்! அந்த
உமர்த்தம்பி வல்லவனை மறக்க லாமோ?

******

அருஞ்சொல் விளக்கம்:

(1) கருநிறம் கொண்டிருப்பதால், குயிலும் காகமும் பார்வைக்கு ஒன்றாய்த் தோன்றும். அதுபோல், செயற்கரிய செய்த உமர்த்தம்பி, சாதாரணமானவர் அல்லர் எனும் உவமை எடுத்தாளப்பட்டுள்ளது.

(2) காதுடையோர் = இங்குக் 'காதுடையோர்' என்பது, குயிலிசைக்கு மயங்கி மகிழும் காதையுடையவர்கள் என்பதைக் குறிக்கும். எ.கா: திருக்குறளில், 'கண்ணுடையர் என்பவர் கற்றோர், முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்' எனும் பாட்டு இங்கு ஒப்பு நோக்கத் தக்கது. உண்மையில், கற்றோரே கண்ணுடையார் என்பது போல, காதால் குயிலிசையைக் கேட்பவரைக் காதுடையவர் என மிகைக் கூற்றாகக் கூறப்பட்டது.

(3) நாற்புலமும் = தமிழிலக்கியத்தின் நிலப் பகுப்புகளான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் (பாலையின்றி) ஆகிய நான்கு நிலப் பகுதிகளைத் தன்னகத்தே கொண்ட அதிராம்பட்டினம்.

(4) 'பொற்குண முன்மாதிரி' = பொன்னான நற்குணத்தின் தாயகம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 'பிறர் நலம் பேணும்' முன்மாதிரியைக் கடைப்பிடித்துச் செயலாற்றியவர்.

(5) உற்பவமாய் = கருக் கொள்ளச் செய்து

(6) ஒறுமையிலாத் தன்மை = யாரையும் வெறுக்காத தன்மை

(7) கடைந்தெடுத்த வெண்ணெய் = பால், தயிர், மோர், வெண்ணெய் ஆகிய நான்கு பரிணாமங்களைப் பெற்ற பின்னர்தான், 'வெண்ணெய்' எனும் அரும்பொருள் உருவாகும். அதுபோல், கணினித் துறையில் முயன்று பாடுபட்டு முன்னேறிப் பெற்ற பயனை (ஒருங்குறி எழுத்துருவை) தமிழுலகிற்கு இலவசமாகக் கொடுத்த கொடையாளி உமர்.

(8) உயிர்ப்பானை = மனித உயிர் மாயும் தன்மையுடையது என்பதைச் சுட்ட, 'உயிர்ப்பானை' எனும் உருவகம் இங்கு எடுத்தாளப்பட்டது.


- கவிஞர் அதிரை அஹ்மது

Monday, May 03, 2010

மீண்டும் ஒரு கோரிக்கை, தேனீ உமர்தம்பிக்கு அங்கீகாரம் கிடைக்குமா?

உமர்தம்பி அவர்களுக்கு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அங்கீகாரம் கிடைக்க மீண்டும் ஒரு வேண்டுகோள்.


இந்த செந்தமிழ் வேண்டுகோள் ஒலியை கேளுங்கள், நம் அதிரை உமர்தம்பி அவர்கள் எவ்வித சாதனைகள் செய்தார்கள், எவ்வகையில் கணினி தமிழுக்காக சேவை செய்தார்கள் என்பதை அழகான செந்தமிழ் நடையில் மிகத் தெளிவாக ஒலியாக்கம் செய்யப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை பதியுங்கள்.


 
 
இந்த வேண்டுகோள் ஒலியை உங்களின் வலைப்பூவிலும் பதியாலாம், இதற்கான அனுமதி இங்கே அனைத்துலக தமிழார்வலர்களுக்கு தருகிறேன். தொடர்புக்கு tjdn77@gmail.com

இதை எழுதி, ஒலியாக்கம் செய்து, நம்மை வெளியிட அனுமதியளித்த என் அருமை நண்பர் K.H.M.ஸதகத்துல்லாஹ்வுக்கு மிக்க நன்றி, மற்றும் தமிழார்வ நண்பர்களுக்கும் நன்றி.

Tuesday, April 27, 2010

யுனிகோடு என் பார்வையில்: உமர்தம்பி

தமிழ் இணையக் கடலில் பழைய, புதிய வலைப்பதிவாளர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த காலம் சென்ற யுனிகோட் உமர்தம்பி அவர்கள் யுனிகோட் பற்றி எழுதிய கட்டுரை அவர்களின் நினைவாக மீள் பதிவு செய்கிறேன்.

யுனிகோடு – என் பார்வையில்

யுனிகோடு பற்றி பேசுபவர்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம்.

1. யுனிகோடு வேண்டும்

2. யுனிகோடு வேண்டாம்

3. யுனிகோடு கடினமானது

இதில் எது சரி?

இன்றைய பாவனையில் இருக்கும் யுனிகோடை எந்தவகையில் சேர்ப்பது?

அது பற்றி அலசப்படுவது சரியான வகையில் அதைப் புரிந்து கொள்ள உதவியிருக்கிறதா? இவைகளைப் பற்றி என் கருத்துக்களைச் சொல்வதற்கு முன் யுனிகோடு என்ற ஒன்று ஏன் தேவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

முதலில் தமிழில் கணினிப் பயன்பாட்டையும் அதில் எழுதப்படும் ஆக்கங்களைப் பற்றியும் ஒரு சிந்தனை வேண்டும். சமீப காலங்களில் நிறையவே தமிழில் ஆக்கங்கள் எழுதப்பட்டிருக்கின்றன; எழுதப் பட்டுக் கொண்டிருக்கின்றன. அவை உலகலாவிய அளவில் பரிமாறப் பட்டுக் கொண்டிருந்தாலும் ஒரு குழுவுக்குள் ஏற்படுத்திக் கொண்ட வரைமுறையின்படியே (என்கோடிங்) அமந்திருப்பதால அதை ‘உலகலாவியது’ என்று கூற இயலாது. பல மொழிகள் முன்பே இம்மாதிரியான முறைப் படுத்தப்பட்டு உலகலவில் பதிவு செய்யப்பட்ட வரைமுறைகளைக் (code pages) கொண்டுள்ளன. ஆனால் உலகலாவிய மொழிகளுக்கெல்லாம் ஒரே விதமான தரத்தைக் கொண்டுவந்துவிட்டால் இதுவரை பட்டியலில் சேராத புதியனவாக இருந்தாலும் அல்லது பழையனவாக இருந்தாலும் எக்காலத்திலும் எப்பகுதியிலும் எல்லோராலும் கையாளப்படும் அல்லவா?. இன்றைய உலகம் தகவல் அமைப்புக்களால் பிணைக்கபட்டிருப்பதால் இம்மதிரியான உலகம் முழுமைக்குமான ஒரு தரம் தேவையாய் இருக்கிறது. இதைத் தருவதுதான் யுனிகோடு.

ஆக, யுனிகோடு என்ற ஒன்று வேண்டும் என்பது தெரிகிறது. ஆனால் அதற்கு ஆதரவும் இருக்கிறது; எதிர்ப்பும் இருக்கிறது. இதற்கு ஆதரவு காட்டுவோர் சில அடிப்படைகளை வைத்து விவாதிக்கின்றனர்:

உலகலாவிய குறியீடு- தரப்படுத்தப்படாத குறியீடுகளில் ஆக்கங்களை எழுதிக் குவித்து ஆங்காங்கே தேங்கி நிற்பதில் எந்த இலாபமும் இல்லை. மேலும் வேண்டும்போது தேடியெடுக்கும் ஒரு தகுமான பொறியும் இல்லை. இதற்கிடையில் பல்வேறு குறியீடுகளை அவரவர் விருப்பத்திற்குச் செய்து, செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் ஓர் அரிய வாய்ப்பையே சிதைத்துவிடுகின்றனர். ஆக நாம் முன்னேறிச் செல்ல யுனிகோடு ஒன்றுதான் வழி.

இனி, யுனிகோடு வேண்டாம் என்று சொல்வோரை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று சில காரணங்களுக்காக வேண்டாம் என்று சொல்பவர். இரண்டு “அது புதியதாகவுள்ளதே, சில நேரம் வேண்டாத சிக்கல் நேருவதுபோல் தோன்றுகிறதே; இப்போதிருப்பதில் என்ன குறை?” என்று வினவி, அதைத் தொட மனமில்லாமலே தூர நிற்பவர்.

நம்மிடையே உள்ள பெரிய குறை, உண்மையை நோக்குவதைவிட கட்சி சார்ந்து கொள்வது. எனவேதான் யுனிகோடே வேண்டும் என்று ஒரு குழுவும், ஒரேடியாக வேண்டாம் என்ற ஒருபுறமும் கோஷம் எழுப்புகின்றன.

உலகலாவிய தரத்தில் தமிழுக்கும் இடம்வேண்டும் என்பதில் எத்தரப்பாருக்கும் இரண்டாம் கருத்தில்லை. ஆனால் அது எப்படி செயலபடுத்தபட்டது என்பதில்தான் கருத்து வேறுபாடு. இந்திய மொழிகளை யுனிகோடில் சேர்க்க முனைந்தபோது “இந்திய மொழிகள்” என்ற ஒரு கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டதுதான் இந்த சிக்கலுக்கெல்லாம் மூல காரணம். ஒவ்வொரு இந்திய மொழியும் அதிலும் குறிப்பாக தமிழ், எழுதுவதிலும் கையாளப்படுவதிலும் தனக்கே உரிய சில பண்புகளைக் கொண்டுள்ளது. இப்படி இந்தியாவில் பேசப்படும் மொழிகளை “இந்திய மொழி” என்ற ஓர் அலகுக்குள் அடக்கி, அதன் சிறப்புதனமை சிதைந்துவிடக் காரணமாகிவிட்டதே என்பதுதான் அங்கலாய்ப்பு. இவ்வாறு இந்திய மொழிகளை யுனிகோடிற்குக் கொண்டுவரும்போது அது தொடர்பானர்வர்கள் சரியான பங்களிப்பைச் செய்யவில்லை என்பதுதான் குற்றச்சாட்டு. மேலும் தமிழுக்காகத் தரப்பட்ட இடம். உயிரெழுத்துக்களுக்கும் உயிர்மெய்யெழுத்துக்களும் தவிர வெறு சில பொந்துகள் – இவைதான் ஒதுக்கப்பட்ட இடங்கள். அடிப்படையில் தமிழ் எழுத இவை போதுமென்றாலும் எல்லா எழுத்துக்களையும் யுனிகோடில் உள்ளடக்குவதால் எந்தப் பிழையும் இல்லை என்பதல்லாமல் அது நன்மை பயப்பதாகவே அமையும். குறிப்பாக மெய்யெழுத்துக்களுக்கு (எ.கா: க்) இரண்டு இடங்கள் பிடிகின்றனவே அது ஒன்றாகிவிடும். மேலும் தேடுபொறி அமைப்பை எளிதாக்கும். எடுத்துக் காட்டாக “பல” என்பதைத் தேடினால் “பல்” என்பது சேர்ந்தே வரும். காரணம் “பல்” என்பது “ப+ல+[புள்ளி]” கொண்டதாகும் இந்த அமைப்பில் முதல் இரண்டு எழுத்துக்களும் சேர்ந்து “பல” என்று ஆகிவிடுவதால் தேடும்போது “பல” என்பதோடு “பல்” உம் சேர்ந்து வரும். “ல்” என்பது ஓர் எழுத்தாக அமையுமானால் “ல” உம் “ல்” உம் வேறுபடுத்திக் காணப்படும். அது மட்டுமல்ல வரிசைப் படுத்துவதிலும் மேலதிகமான சிக்கல் இருக்காது.

ஆனால் மேற்சொல்லப்பட்ட வலுவான காரணங்களில்லாமல் வெறுனனே “யுனிகோடா?… தூ..தூ..” என்பவர்களை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். இடம் அதிகமாகப் பிடிக்கும் என்பது ஒரு காரனமாக இருந்தாலும் இன்றைய நிலையில் இடம் என்பது ஒரு பொருட்டல்ல.

இவ்வளவு இடர்பாடுகளை வைத்துக்கொண்டு யுனிகோடிற்குப் போக வேண்டுமா? ஆமாம்; போகத்தான் வேண்டும். காரணம் இந்த உண்மைகள் இப்போது வெளியில் பேசப் படுவது வெகு காலம் தாழ்த்தித்தான். இந்த ஆய்வுகள் முன்னரே நடக்கப் பெற்று தீர்வு கண்டிருக்க வேண்டும். இப்போது எல்லா செயலிகளும் யுனிகோடை அடிப்படையாக வைத்துதுத்தான் வருகின்றன. புதுச் செயலிகளை உருவாக்குவோருக்கு பன்மொழி பயன்பாடிற்கு அவர்களின் செயலிகளைத் தருவது எளிதாகிறது. இப்போது நாம் இதில் இடம்பிடிக்க வில்லையானால் நாம் வெகு தூரத்தில் பின்னிற்கு நிற்போம். இனி யுன்கோடில் பெரிய திருத்தம் வராது என முடிவாகிவிட்டது. ஒருவேளை அப்படியரு மாற்றம் நாம் முன்னெ சொன்னபடி வருவதானால் அது வருடங்கள் பிடிக்கும். நாம் பின்னே நிற்கப்போவது நிச்சயம். ஆகையால் சில சிக்கல்களை எதிர்கொண்டு யுனிகோடைப் பயன்படுத்தி ஆகவேண்டியிருக்கிறது. கடினமாக இருந்தாலும் நம் கணிஞர்கள் சிக்கலுக்குத் தீர்வு காணாமல் இருக்க மாட்டார்கள்.

நாம் குடியிருக்கப் போகும் வீடு, நாம் விரும்பியாவாறு இல்லாதிருக்கலாம். ஒருசில ஓட்டை உடைசல்களுடன் இருப்பதால் எனக்கு வீடே வேண்டாமென்று இருப்பது எப்படிச் சரியாகும்?

ஆக்கம்: உமர் தம்பி,
நன்றி: எழில் நிலா .காம்
 
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ் கணினித்துறையில் தன்னலமற்ற சேவைகள் செய்த உமர் தம்பிக்கு அங்கீகாரம் கிடைக்குமா?



கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மீண்டும் உமர்தம்பி அவர்களின் மற்றும் ஒரு கட்டுரையில் சந்திக்கிறேன்.

Wednesday, April 14, 2010

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் 'உமர்தம்பி'க்கு அங்கீகாரம் கிடைக்குமா?


தமிழ் இணைய உலகில் நன்கறியப்பட்ட தமிழ் கணிமைக் கொடையாளர் அதிரை உமர்தம்பி அவர்கள் மறைந்து கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் ஆகி விட்டன. ஓரிருவரிகொண்ட மென்பொருள் நிரழிகளை இலட்சக்கணக்காண ரூபாய்க்கு விலைபேசி விற்கப்பட்ட காலகட்டத்தில் சல்லிக் காசு இலாப நோக்கின்றி, தமிழ்கூறும் நல்லுலகு தடையின்றி தமிழில் தட்டச்ச உதவும் பல மென்பொருள் நிரழிகளை உருவாக்கி பொதுப்பயன்பாட்டுக்கு வைத்தவர் திரு.உமர் தம்பி அவர்கள்.

விண்டோஸ் 98 பயனர்கள் தமிழிணைய தளங்களை எவ்வித சிரமமுமின்றி கணினியில் பார்வையிடவும், யூனிகோட் ஒருங்குறியில் தட்டச்சவும் உமர் தம்பி உருவாக்கிய 'தேனீ' வகை எழுத்துருக்கள் மற்றும் நிரழிகள் இன்றும் பல தமிழ்தளங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

தமிழ் எழுத்துறுக்கள் (Theenee, Theneeuni மற்றும் சில..) ஆங்கிலம்-தமிழ் அகராதி, தமிழ் எழுத்துறுமாற்றி (தமிழெழுதி), மற்றும் தமிழ் இணைய தளங்களைப் பார்வையிட உதவும் தானியங்கி/டைனமிக் எழுத்துறுமாற்றி மற்றும் பல தொடக்கநிலை நிரழி/மென்பொருள்களின் சொந்தக்காரராக இருந்தாலும் அவை எதிலும் தனது பெயரோ அல்லது அவற்றிற்குண்டான கிரடிட்டோ எதிர்பாராது சேவையாற்றியவர்.

கணினித் தமிழ் தளங்களான சங்கமம், தமிழ் வலைப்பூக்களின் முன்னோடி திரட்டியான தமிழ்மணம், எழில்நிலா மற்றும் அதிரை.காமிலும் பல்சுவை கட்டுரைகளையும் எழுதியுள்ளார். எழுதப்பழகுவோம் HTML, யுனிகோடும் இயங்கு எழுத்துருவும், யுனிகோடும் தமிழ் இணையமும், யுனிகோடின் பன்முகங்கள்-RSS ஓடை-ஒரு அறிமுகம்,தெரிந்து கொள்ளுவோம்: இயங்கு எழுத்துரு மற்றும் பல கணினித் தமிழ் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

நான்காம் இணையத் தமிழுக்காகச்செய்த தமிழ்ச்சேவை மகத்தானது. இ-கலப்பை தமிழ் தட்டச்சு மென்பொருள் உருவாக்கத்தில் பின்னணியிலிருந்து செயல்பட்டவர்களில் உமர்தம்பியும் ஒருவர்.

சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் உத்தமம் (INFITT) சார்பில் நடந்த மாநாட்டில் 'உமர்தம்பி அரங்கு' என்று பெயரிட்டிருந்ததாக தமிழூற்று மாஹிர் தெரிவித்திருந்தார்.

தமிழா,அன்புடன்,அதிரை வெப் கம்யூனிடி மற்றும் பல குழுமங்களிலிலும் உமர்தம்பி அவர்களின் கருத்துப் பரிமாற்றங்கள் பலருக்கும் பயனுள்ளதாக இருந்துள்ளன. மொத்தத்தில் தமிழ் கணிமையின் முன்னோடியாக அரியபல தொண்டாற்றியுள்ள அதிரையின் தவப்புதல்வர்களில் ஒருவரான உமர்தம்பி வாழும்காலத்தில் கவுரவிக்கப்பட்டிருக்க வேண்டியவர்.

மறைந்த உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்தொண்டைப் போற்றும் வகையில் கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ்கணிமைக்கு பங்காற்றியவர்களுக்கு 'யூனிகோட் உமர்தம்பி' பெயரால் விருது வழங்கி கவுரவிப்பதே காலத்தினால் செய்த நன்றியாகும் என்பது தமிழ் கணிமை பயனர்களின் அவா!

தமிழக முதல்வரும், உலகதமிழ் செம்மொழி மாநாட்டுக் குழுவினரும் உரிய நேரத்தில் இதைச் செய்வார்களா?

உமர்தம்பி அவர்களை நினைவுகூறும் தமிழிணைய தளங்கள்,குழுமங்கள் மற்றும் தனிநபர் வலைப்பூக்களின் தொகுப்பை கீழ்கண்ட சுட்டிகளில் வாசிக்கலாம்.

இணைய தளங்கள்:


www.ta.wikipedia.org/wiki/உமர்_தம்பி

http://www.tamilmanam.net/m_thiratti_author.php?value=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D&pageno=17

http://www.pudhucherry.com/pages/umar.html

http://www.satyamargam.com/index2.php?option=com_content&task=emailform&id=166&itemid=300131

www.geotamil.com/pathivukal/notice_unicode_umar.html

http://www.islamkalvi.com/portal/?p=77

http://ezilnila.com/archives/803

http://ezilnila.com/2009/07/umarthambi/

http://tamilnirubar.org/?p=9958

http://www.nouralislam.org/tamil/islamkalvi/web/unicode_dynamic_website.htm

http://umarthambi.sulekha.com/blog/post/2006/07/.htm

http://www.tmpolitics.net/reader/

http://www.desikan.com/blogcms/?item=theene-eot

குழுமங்கள்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4845&mode=threaded&pid=71005

http://www.no1tamilchat.com/no1chat/index.php?topic=1213.0

http://groups.yahoo.com/group/tamil_araichchi/message/4633

http://tech.groups.yahoo.com/group/e-Uthavi/message/579

http://groups.google.com/group/anbudan/browse_thread/thread/93c7eeb38bede818/814be493e9c363f6?hl=en&ie=UTF-8&q=csd_one

http://groups.google.com/group/Thamizmanam/browse_thread/thread/a510f4d1e236527c/deffa100a949050e#deffa100a949050e

வலைப்பூக்கள்:

http://valai.blogspirit.com/archive/2006/07/14/கணித்தமிழர்-உமர்தம்பி.html

http://muthukumaran1980.blogspot.com/2006/07/blog-post_24.html

http://akaravalai.blogspot.com/2006/07/blog-post.html

http://kasiblogs.blogspot.com/2006/07/blog-post.html



நிரழிகள்/மென்பொருள் தரவிறக்கம்

http://www.pudhucherry.com/text/THENEE.eot


http://www.pudhucherry.com/text/VAIGAIU0.eot

உமர் ஒருங்குறி எழுதி

(AWC Phonetic Tamil Unicode Writer)

http://www.pudhucherry.com/pages/UmarUni.html

உமர் ஓடை எழுதி


http://www.pudhucherry.com/pages/umarrss.html

ஓரளவு மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.மேலதிக தகவலறிந்தவர்கள் தயவு செய்து கருத்துக்களை பின்னூட்டமிடவும். மேலே குறிப்பிடத் தவறிய சுட்டிகளையும் பின்னூட்டத்தில் தந்துதவினால் உமர்தம்பி அவர்கள் குறித்த தேட்ல்களுக்கு உதவியாக இருக்கும்.