Saturday, May 08, 2010

யூனிகோடு உமர் by திரு. சுரதா யாழ்வாணன்

மறைந்த தமிழ் கணினி ஆசான், தேனீ எழுத்துரு தந்த அதிரை "உமர்தம்பி" அவர்கள் பற்றி தமிழ் கணினி மேதை மரியாதைக்குறிய "திரு.சுரதா யாழ்வாணன்" அவர்கள்  பாராட்டி 15  ம் ஆகஸ்ட் 2006ம் ஆண்டு வெளியிட்ட செய்தியை இங்கு மீண்டும் இணையத் தமிழார்வளர்களுக்கு பகிர்ந்துக்கொள்கிறேன்.

வழமைபோல் தமிழ் மணத்தில் ப்ளோக்கர் நாட் பதிவுகளை பார்த்துக்கொண்டு வந்தபோது அந்த செய்தி கண்ணில் பட்டது. "உமர் மறைவு" பற்றிய செய்தி அது. சற்று திக்கித்து சுதாகரித்து சுட்டியை க்ளிக் பண்ணுவதற்குள் மனதுக்குள் ஆயிரம் எண்ணங்கள் ஓடி மறைந்தன..

என்னவாயிற்று துபாயில்தானே இருந்தார். ஏதாவது விபத்தாகவிருக்குமே?..மத்தியகிழக்கு நாடுகளில் வேலையிலிருப்போர் விபத்து மரணம் என அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறேன். அதைவிட அண்மையில் தான் கார்த்திகேயன் என்று ஒரு வலைப்பதிவர்கூட பெங்களுரில் விபத்தில் பலியாகியிருந்தார்.எனவே பல எண்ணங்கள்.

பின்னர் அந்த மறைவு பற்றிய முப்தியின் பதிவைப் பார்த்த போது கூட அதில் ஆரம்பத்தில் மறைவு தவிர வேறு போதிய விபரம் கிடைக்கவில்லை. ஆனால் உமர் என்ற தமிழ்க்கணனி ஆர்வலனின் இடம் வெற்றிடமாகியது என்ற செய்தி மட்டும் காணப்பட்டு மனதுக்குள் உறைத்தது.

நானும் மற்றவர்களைப்போலத்தான் உமருடன் தமிழ் செயலி தொடர்பான மடல் தொடர்பு வைத்திருந்தேன். ஒரு முறை அவரை தேனி தானியங்கி எழுத்துரு தொடர்பாக பாராட்டி ஒரு மடலிட்டிருந்தேன்.

அப்படி நான் பாராட்டக்கூடியவாறு உமர் என்னதான் சாதனை செய்திருந்தார்?

அநேக வலைப்பதிவர்கள் உமரின் தானியங்கி எழுத்துருவை பாவிப்பவர்கள். அதை அவரது மறைவு பற்றிய பதிவில் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் உண்மையில் தானியங்கி எழுத்துரு செய்வது சுலபம். ஆனால் உமர் செய்தது அது அல்ல, தானியங்கி எழுத்துரு அமைக்கும்போது அந்த microsoft/weft செயலி ஒவ்வொருமுறையும் அது எந்த இணையத்தளத்திலிருந்து செயல்படவிருக்கிறது என கண்டிப்பாக கேட்கும். உதாரணமாக திசைகள்.கொம் என கொடுத்திருந்தோமேயானால் அது தில்லை.கொம் என்ற தளத்திற்கு இயங்காது. இதை ஆரம்பத்தில் கவனித்த நான் முகவரிக்குப்பதிலாக http://எனப்போட்டு அந்த ஆரம்பத்தில் வரும் அத்தனை முகவரிகளுக்கும் அந்த தானியங்கி எழுத்துரு இயங்கும் வண்ணம் முயற்சித்தேன், ஆனால் அது சரிவரவில்லை. இதே எண்ணம் உமர் மனதிலும் தோன்றி அதே http:// செயல்பாட்டை நிறுவி தேனி

எழுத்துருவை அனைத்து தளங்களிலும் அதாவது http://என ஆரம்பிக்கும் அத்தனை முகவரிகளுக்கும் செயல்படுமாறு அந்த செயலியை உடைத்து (hack) நடைமுறைப்படுத்தியிருந்தார் உமர். அவரது இந்த உத்தியைதான் நான் மிக வெகுவாக மெச்சி பாராட்டியிருந்தேன்.அதற்கு அவர் தன்னடக்கமாக எனது தானியங்கி எழுத்துரு e-lesson பற்றி சிலாகித்து மேலதிகமாக பாராட்டியிருந்தார்...


இதே போல் இன்னுமொரு சம்பவம் எல்லோரும் அன்று தமிழிற்கு யூனிகோடுதான் சரியானவழி என முனைப்பாயிருந்தார்கள்.ஆனால் அதை பலரும் பயன்படுத்தக்கூடிய வழியில் செயல்படுத்தவைக்க தயாராகவிருக்கவில்லை. கிடைக்கக்ககூடிய எழுத்துருவோ ஒன்றில் வர்த்தக நோக்கில் பணம் கட்டி வாங்கும் எழுத்துருவாகவிருந்தது அல்லது எழுத்து சீர்திருத்தமுறையில் அமைந்திருந்தது. இந்த நிலமையில்தான் யூனிகோட்டை சரளமாக எல்லோரும் பாவிக்கும் வண்ணம் செய்வதற்காக தமிழில் இதற்கான எழுத்துரு தேவை என மடலாடற்குழுக்களில் வர்த்தக எழுத்துருக்களை தவிர்த்து யூனிகோட் எழுத்து தேவை என நான் தேடும்போது சில வாரங்களில் உடனடியாக தனது தேனீ எழுத்துருவை உருவாக்கி இலவசமாக தமிழ்க்கணனி உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

இன்று பல யூனிகோட் எழுத்துருக்கள் அரசு ஆதரவுடனும் தனிப்பட்ட பலரது சேவை நோக்கத்துடனும் வந்துவிட்டன. ஆனால் அன்று உமர் காலமறிந்து ஆபத்பாந்தவனாக வெளியிட்ட தேனி எழுத்துரு இன்றுவரை நிற்கின்றது.

அதே போல் அன்று அந்த வசதி உமர் தந்திருக்காவிடில் தமிழில் யூனிக்கோடின் பாய்ச்சல் சற்று தாமதப்பட்டிருக்கும் என்று சொன்னாலும் மிகையல்ல..

இன்னொரு எழுத்துருவாக்க அன்பர் ஒருவர் தனது எழுத்துருவை யூனிகோட் முறைமைக்கு மாற்ற என்னிடம் தொடர்பு கொண்டபோது உமரைத்தான் நான் சுட்டிவிட்டிருந்தேன். பின்னர் உமரின் உதவியுடன் அது வைகை யூனிகோட் எழுத்துருவாகியது. அதுகூட இலவசமாகத்தான் வெளியாகியது.

இதன் பின்னர் உள்ள உழைப்பு, ஆர்வம் பயனாளிகளுக்கு ஒருபோதுமே தெரியவராது. ஆனால் இந்த உழைப்பு வீண்போகவில்லை என்பதை உமரின் பிரிவின் பின் அவருக்கு அஞ்சலி செலுத்திய வலைப்பதிவர்கள் நிருபித்திருக்கிறார்கள். இனி இந்த கணனி உழைப்பாளி திரும்பவரப்போவதில்லை.

ஆனால் நாளை..

உமர் உருவாக்கிய அத்தனை செயலிகளும் காலவோட்டத்தில் உபயோகமாகாமல் போகலாம். ஆனால் உமர் என்ற இந்த தமிழ்த்தொண்டனின் அந்த தமிழார்வ, கணனி உழைப்பு , சேவை அடுத்து வரும் தமிழ்கணனி ஆர்வலர்களுக்கு ஒரு உதாரணமாகத்திகழ்ந்து அவர்களும் இதேபோல் வீச்சுடன் தமிழுக்கு சேவை செய்ய ஒரு உந்துதலாகவிருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

பி.கு எனக்கு இன்றுள்ள ஒரே மனச்சங்கடம் உமருடன் ஒருவேளையாவது
தொலைபேசியிருக்கலாமே என்பதுதான்.

-சுரதா யாழ்வாணன்-

நன்றி: http://www.yarl.com/forum3/index.php?showtopic=12890

No comments:

Post a Comment