Thursday, May 27, 2010

என்னால் சாதிக்க முடிந்தது, ஏன் உங்களால் முடியாதா?

இந்த ஆண்டு 10 வகுப்பு பொது தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த மாணவி சகோதரி ஜாஸ்மினுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள், இச்சகோதரிக்கு ஊக்கம் அளித்த பெற்றோருக்கும், பள்ளி ஆசிரியர்களும் என்னுடைய பாராட்டுக்கள். சகோதரி ஜாஸ்மினுடைய சாதனை நம்மை மிக ஆழமாக சிந்திக்க வைக்கிறது, நம் ஏழை, நடுத்தரப் பிள்ளைகளாலும் எந்த சாதனையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை தந்துள்ளார் சகோதரி ஜாஸ்மின். ஹிஜாபுடன் அச்சகோதரியின் புகைப்படத்தை பார்க்கும் போது உண்மையில் எல்லையற்ற மகிழ்ச்சி. என்னால் நம்ப முடியவில்லை, இது நிஜம் தானா என்று. ஹிஜாபையும், பர்தாவை கேவலப்படுத்தி வரும் மேல் நாட்டு கலாச்சாரவதிகளின் முகத்தில் கரி பூசி இருக்கிறார் சகோதரி ஜாஸ்மின். எல்லாம் அல்லாஹ்வின் செயல், அவன் நாடினால் எந்த வெற்றியை நம் சமுதாயத்தால் படைக்க முடியும்.

நெல்லை டவுணில் உள்ள மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி சகோதரி ஜாஸ்மின் 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ள நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சகோதரி ஜாஸ்மினின் தந்தை சேக் தாவூத் ஊர் ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். அவரது தாய் நூர்ஜஹான். மாணவி சகோதரி ஜாஸ்மினுக்கு இம்ரான் என்ற அண்ணனும், இர்பான் என்ற தம்பியும் உள்ளனர். இவர்களில் இம்ரான் கூலி வேலை செய்து வருகிறார். இர்பான் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். எவ்வளவு எழிமையான குடும்பம்.

சகோதரி ஜாஸ்மின் சிறுவயதிலிருந்தே மிகவும் ஆர்வமாக படித்து வருகிறார். மகளை அதிக செலவு செய்து தனியார் பள்ளியில் படிக்க வைக்க வசதி இல்லாத காரணத்தால் நெல்லை டவுணில் செயல்பட்டு வரும் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். தனது குடும்ப நிலையை உணர்ந்த சகோதரி ஜாஸ்மின் சிறந்த முறையில் படித்து அனைத்து வகுப்பிலும் முதல் மாணவியாக திகழ்ந்து வந்தார். சகோதரி ஜாஸ்மின் முதல் வகுப்பிலிருந்து தற்போது வரை நெல்லை டவுண் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியிலேயே படித்து வந்தார்.

பணம் இருந்தால்தான் படிக்க முடியும், தனியார் பள்ளியில் படித்தால்தான் நிறைய மதிப்பெண்கள் வாங்க முடியும் என்று ஒரு மாயை தமிழ்நாட்டில் உள்ளது. அந்த மாயத்தோற்றத்தை இன்று உடைத்தெறிந்து இருக்கிறார் நெல்லை மாணவி சகோதரி ஜாஸ்மின். படிப்பில் முதன்மை பெறுவதற்கு, ஆர்வமும், விடா முயற்சியும் இருந்தாலே போதும் என்று சகோதரி ஜாஸ்மின் எடுத்துக்காட்டி உள்ளார்.

இவை மட்டுமின்றி தமிழக கல்வி வரலாற்றில் இன்னொரு அசாத்திய சாதனையையும் சகோதரி ஜாஸ்மின் புரிந்துள்ளார். மாநகராட்சிப்பள்ளி என்றாலே, கல்வித்தரம் இருக்காது என்று இளக்காரமாக நினைக்கும் மனோபாவம் உள்ளது. அதற்கு சகோதரி ஜாஸ்மின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தனது மகளின் சாதனைப் பற்றி சகோதரி ஜாஸ்மினின் தகப்பனார் ஷேக்தாவூத் கூறியதாவது: எனது குழந்தைகளை நன்கு படிக்க வைத்து அவர்களை சமுதாயத்தில் உயர்ந்தவர்களாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் படிக்க வைத்து வருகிறேன். அதற்கு ஏற்றாற்போல் மகள் ஜாஸ்மின் சிறப்பாக படித்து வருகிறாள். அவள் தொடக்கத்திலிருந்தே படிப்பில் மிகவும் ஆர்வம் காட்டியதால் அவள் படிப்புக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படாத வகையில் சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்தோம். பத்தாம் வகுப்பிற்கு வந்ததும் டி.வி. பார்க்கும் பழக்கத்தை விட்டு விட்டாள். டியூஷனுக்கு எங்கும் செல்லவில்லை. அன்றைய பாடங்களை அன்றே படித்து வந்ததால் சாதனை படைத்துள்ளார். அவளது விருப்பப்படி படிக்க வைப்பேன்.

தனது வெற்றி பற்றி சகோதரி ஜாஸ்மின் கூறியதாவது:- மாநில அளவில் சாதனை படைக்க கடினமாக படித்தேன். 498 மதிப்பெண்கள் பெறுவேன் என எதிர் பார்த்தேன். சமூக அறிவியலில் 2 மதிப்பெண்கள் குறைந்து விட்டதால் அதனை பெற முடியவில்லை. பெரிய பள்ளியில் படித்தால்தான் சாதிக்க முடியும் என்றனர். ஆனால் எங்கள் பள்ளி சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை அல்லாஹ்வின் கிருபையால் நடந்தது. ஆசிரியர்கள் சிறந்த முறையில் பயிற்சி அளித்து எனக்கு ஊக்கமளித்தார்கள். தினமும் காலையிலும், மாலையிலும் படிப்பேன். அன்றைய பாடங்களை அன்றே தவறாமல் படித்து விடுவேன். இரவு 1 மணி வரை படிப்பேன்.

10-ம் வகுப்புக்கு வந்த பிறகு டி.வி பார்க்க மாட்டேன். எனது குடும்பம் நடுத்தர குடும்பம். தற்போதும் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம். கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படிக்க ஆசைபடுகிறேன். அதன் பிறகு ஐ.ஏ.எஸ் முடித்து கலெக்டராகி மக்களுக்கு சேவை செய்வேன்.


எங்கே செல்கிறது நம் பாதை? என்று பல வசதி வாய்ப்புகள் உள்ள நம்மூர் மாணவர்களும் பெற்றோர்களும் சுயபரிசோதனை செய்து சிந்திக்க வேண்டாமா?

ஊர் ஊராக ஜவுளி வியாபரம் செய்து வரும் சேக்தாவுத் அவர்கள் தன் பிள்ளைகள் சமுதாயத்தில் நல்ல நிலையில் வரவேண்டும் என்று பல கஷ்டங்களையும் தாங்கி படிக்க வைத்து தன் பெண்ணை சாதனை படைக்க வைத்திருக்கிறாறே ஏன் நம்மாலும் நம் பிள்ளைகளை சாதனை படைக்க வைக்க முடியாதா என்ன?

பணம் இருந்தால் தான் நல்ல தனியார் பள்ளியில் படிக்க முடியும், அதிக மதிப்பெண்கள் முதல் மதிப்பெண் எடுக்க முடியும் என்ற எட்டாக்கனியை மாநகராட்சி பள்ளியில் படித்து சகோதரி ஜாஸ்மின் எட்டிப்பிடித்துள்ளார். எல்லாவசதிகளும் இருக்கும் நம் பிள்ளைகளால் அக்கனியை ஏன் எட்டிப்பிடிக்க முடியாதா என்ன?

வசதி வாய்ப்புகளும் தொழில்நுட்பங்களும் குறைவாக உள்ள அரசு மாநகராட்சிப் பள்ளி மாணவி மாநில அளவில் சாதனை படைக்க வைத்திருக்கிறது, இப்பள்ளியை விட சில வசதி வாய்ப்புகள் உள்ள நம்மூர் பள்ளிகளால் ஏன் நம் மாணவர்களை சாதனை படைக்க வைக்க முடியாதா என்ன?

10 ம் வகுப்பு படிக்க ஆரம்பித்திலுருந்து தொலைகாட்சி பார்பதில்லை, IAS படித்து இச்சமுதாயத்திற்காக சேவை செய்ய வேண்டும் என்று லட்சியக் கணவுடன் கூறியிருக்கிறார் சகோதரி ஜாஸ்மின், சிறு வயதிலிருந்து குறிக்கோள் மற்றும் லட்சியத்தையும் மனதில் நிறுத்தி நம் பிள்ளைகளை இவ்வுலகில் பல சாதனைகள் செய்ய வைக்க முடியாதா என்ன?

சகோதரி ஜாஸ்மின் பத்திரிக்கைகளுக்கு அளித்து வரும் செய்திகளை (குறிப்பாக, அதிகம் டிவீ பார்ப்பதில்லை என்ற செய்தியை) நம் பிள்ளைகளுக்கு எடுத்துக்காட்டுங்கள், வீட்டில் உள்ள தாய்மார்களுக்கும் எடுத்துக்காட்டுங்கள், பிள்ளைகளை நல்ல மேல் படிப்பு படிக்க வையுங்கள் குறிப்பாக நம் பெண் மக்களை.

நம் சமுதாயப் பிள்ளைகள் படிப்பில் சாதனைப்படைக்க ஆரம்பித்துள்ளார்கள் என்பதை இவ்வாண்டு 12 ம் & 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இவ்வுலக்கு எடுத்துக்காட்டுகிறது. சகோதரி ஜாஸ்மினை ஒரு ரோல் மடலாக வைத்து நம் பிள்ளைகளை கடின முயற்சி செய்து சமுதாயத்தில் நல்ல நிலைக்கு அவர்களை வரவைத்து, நம் சமுதாயத்திற்கு,  நம் நாட்டிற்கு சேவை செய்து சாதனைப் படைக்க ஒரு நல்ல பாதை அமைக்க நாம் அனைவரும் சபதம் எடுப்போம். இச்சமுதாயம் முன்னேற்றத்தை கல்வியால் மாடுமே நாம் எட்டமுடியும். சாதனைகளை எல்லா சமுதாயத்தாலும் எட்டிப்பிடிக்கும் நிலை இன்று முதல் ஆரம்பம், நிச்சயம் கல்வியில் நல்ல போட்டிகளுடன் நல்ல நல்ல திறமைசாலிகள் தமிழகத்தில் வருவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

10 வகுப்பில் வெற்றி பெற்ற அனைத்து சகோதரி, சகோதரர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களும், பிராத்தனைகளும்.

அதிரை தாஜூதீன்

tjdn77@gmail.com

நன்றி: http://www.tmmk.in/ & http://www.maalaimalar.com/

Saturday, May 08, 2010

உமர்தம்பிக்கு அங்கீகாரம் – யூத்புல் விகடன்

உமர்தம்பியின் இணையத் தமிழ் சேவைக்கு அங்கீகாரம் கிடைக்க தமிழ்மணத்தை தொடர்ந்து விகடன் இணையமும் செய்தி வெளியிட்டுள்ளது மிக்க மகிழ்ச்சி.


இத்தருனத்தில் விகடன் நிறுவனத்தாருக்கும்,  யூத்புல் விகடன் ஆசிரியர் குழுவுக்கும், ஊழியர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

வாழ்க உங்கள் தமிழ் தொண்டு.




அன்புடன் தாஜூதீன்

யூனிகோடு உமர் by திரு. சுரதா யாழ்வாணன்

மறைந்த தமிழ் கணினி ஆசான், தேனீ எழுத்துரு தந்த அதிரை "உமர்தம்பி" அவர்கள் பற்றி தமிழ் கணினி மேதை மரியாதைக்குறிய "திரு.சுரதா யாழ்வாணன்" அவர்கள்  பாராட்டி 15  ம் ஆகஸ்ட் 2006ம் ஆண்டு வெளியிட்ட செய்தியை இங்கு மீண்டும் இணையத் தமிழார்வளர்களுக்கு பகிர்ந்துக்கொள்கிறேன்.

வழமைபோல் தமிழ் மணத்தில் ப்ளோக்கர் நாட் பதிவுகளை பார்த்துக்கொண்டு வந்தபோது அந்த செய்தி கண்ணில் பட்டது. "உமர் மறைவு" பற்றிய செய்தி அது. சற்று திக்கித்து சுதாகரித்து சுட்டியை க்ளிக் பண்ணுவதற்குள் மனதுக்குள் ஆயிரம் எண்ணங்கள் ஓடி மறைந்தன..

என்னவாயிற்று துபாயில்தானே இருந்தார். ஏதாவது விபத்தாகவிருக்குமே?..மத்தியகிழக்கு நாடுகளில் வேலையிலிருப்போர் விபத்து மரணம் என அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறேன். அதைவிட அண்மையில் தான் கார்த்திகேயன் என்று ஒரு வலைப்பதிவர்கூட பெங்களுரில் விபத்தில் பலியாகியிருந்தார்.எனவே பல எண்ணங்கள்.

பின்னர் அந்த மறைவு பற்றிய முப்தியின் பதிவைப் பார்த்த போது கூட அதில் ஆரம்பத்தில் மறைவு தவிர வேறு போதிய விபரம் கிடைக்கவில்லை. ஆனால் உமர் என்ற தமிழ்க்கணனி ஆர்வலனின் இடம் வெற்றிடமாகியது என்ற செய்தி மட்டும் காணப்பட்டு மனதுக்குள் உறைத்தது.

நானும் மற்றவர்களைப்போலத்தான் உமருடன் தமிழ் செயலி தொடர்பான மடல் தொடர்பு வைத்திருந்தேன். ஒரு முறை அவரை தேனி தானியங்கி எழுத்துரு தொடர்பாக பாராட்டி ஒரு மடலிட்டிருந்தேன்.

அப்படி நான் பாராட்டக்கூடியவாறு உமர் என்னதான் சாதனை செய்திருந்தார்?

அநேக வலைப்பதிவர்கள் உமரின் தானியங்கி எழுத்துருவை பாவிப்பவர்கள். அதை அவரது மறைவு பற்றிய பதிவில் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் உண்மையில் தானியங்கி எழுத்துரு செய்வது சுலபம். ஆனால் உமர் செய்தது அது அல்ல, தானியங்கி எழுத்துரு அமைக்கும்போது அந்த microsoft/weft செயலி ஒவ்வொருமுறையும் அது எந்த இணையத்தளத்திலிருந்து செயல்படவிருக்கிறது என கண்டிப்பாக கேட்கும். உதாரணமாக திசைகள்.கொம் என கொடுத்திருந்தோமேயானால் அது தில்லை.கொம் என்ற தளத்திற்கு இயங்காது. இதை ஆரம்பத்தில் கவனித்த நான் முகவரிக்குப்பதிலாக http://எனப்போட்டு அந்த ஆரம்பத்தில் வரும் அத்தனை முகவரிகளுக்கும் அந்த தானியங்கி எழுத்துரு இயங்கும் வண்ணம் முயற்சித்தேன், ஆனால் அது சரிவரவில்லை. இதே எண்ணம் உமர் மனதிலும் தோன்றி அதே http:// செயல்பாட்டை நிறுவி தேனி

எழுத்துருவை அனைத்து தளங்களிலும் அதாவது http://என ஆரம்பிக்கும் அத்தனை முகவரிகளுக்கும் செயல்படுமாறு அந்த செயலியை உடைத்து (hack) நடைமுறைப்படுத்தியிருந்தார் உமர். அவரது இந்த உத்தியைதான் நான் மிக வெகுவாக மெச்சி பாராட்டியிருந்தேன்.அதற்கு அவர் தன்னடக்கமாக எனது தானியங்கி எழுத்துரு e-lesson பற்றி சிலாகித்து மேலதிகமாக பாராட்டியிருந்தார்...


இதே போல் இன்னுமொரு சம்பவம் எல்லோரும் அன்று தமிழிற்கு யூனிகோடுதான் சரியானவழி என முனைப்பாயிருந்தார்கள்.ஆனால் அதை பலரும் பயன்படுத்தக்கூடிய வழியில் செயல்படுத்தவைக்க தயாராகவிருக்கவில்லை. கிடைக்கக்ககூடிய எழுத்துருவோ ஒன்றில் வர்த்தக நோக்கில் பணம் கட்டி வாங்கும் எழுத்துருவாகவிருந்தது அல்லது எழுத்து சீர்திருத்தமுறையில் அமைந்திருந்தது. இந்த நிலமையில்தான் யூனிகோட்டை சரளமாக எல்லோரும் பாவிக்கும் வண்ணம் செய்வதற்காக தமிழில் இதற்கான எழுத்துரு தேவை என மடலாடற்குழுக்களில் வர்த்தக எழுத்துருக்களை தவிர்த்து யூனிகோட் எழுத்து தேவை என நான் தேடும்போது சில வாரங்களில் உடனடியாக தனது தேனீ எழுத்துருவை உருவாக்கி இலவசமாக தமிழ்க்கணனி உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

இன்று பல யூனிகோட் எழுத்துருக்கள் அரசு ஆதரவுடனும் தனிப்பட்ட பலரது சேவை நோக்கத்துடனும் வந்துவிட்டன. ஆனால் அன்று உமர் காலமறிந்து ஆபத்பாந்தவனாக வெளியிட்ட தேனி எழுத்துரு இன்றுவரை நிற்கின்றது.

அதே போல் அன்று அந்த வசதி உமர் தந்திருக்காவிடில் தமிழில் யூனிக்கோடின் பாய்ச்சல் சற்று தாமதப்பட்டிருக்கும் என்று சொன்னாலும் மிகையல்ல..

இன்னொரு எழுத்துருவாக்க அன்பர் ஒருவர் தனது எழுத்துருவை யூனிகோட் முறைமைக்கு மாற்ற என்னிடம் தொடர்பு கொண்டபோது உமரைத்தான் நான் சுட்டிவிட்டிருந்தேன். பின்னர் உமரின் உதவியுடன் அது வைகை யூனிகோட் எழுத்துருவாகியது. அதுகூட இலவசமாகத்தான் வெளியாகியது.

இதன் பின்னர் உள்ள உழைப்பு, ஆர்வம் பயனாளிகளுக்கு ஒருபோதுமே தெரியவராது. ஆனால் இந்த உழைப்பு வீண்போகவில்லை என்பதை உமரின் பிரிவின் பின் அவருக்கு அஞ்சலி செலுத்திய வலைப்பதிவர்கள் நிருபித்திருக்கிறார்கள். இனி இந்த கணனி உழைப்பாளி திரும்பவரப்போவதில்லை.

ஆனால் நாளை..

உமர் உருவாக்கிய அத்தனை செயலிகளும் காலவோட்டத்தில் உபயோகமாகாமல் போகலாம். ஆனால் உமர் என்ற இந்த தமிழ்த்தொண்டனின் அந்த தமிழார்வ, கணனி உழைப்பு , சேவை அடுத்து வரும் தமிழ்கணனி ஆர்வலர்களுக்கு ஒரு உதாரணமாகத்திகழ்ந்து அவர்களும் இதேபோல் வீச்சுடன் தமிழுக்கு சேவை செய்ய ஒரு உந்துதலாகவிருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

பி.கு எனக்கு இன்றுள்ள ஒரே மனச்சங்கடம் உமருடன் ஒருவேளையாவது
தொலைபேசியிருக்கலாமே என்பதுதான்.

-சுரதா யாழ்வாணன்-

நன்றி: http://www.yarl.com/forum3/index.php?showtopic=12890

Tuesday, May 04, 2010

யார் இந்த உமர்த்தம்பி?

கருங்குயிலும் காகமதும் ஒன்றாய்த் தோன்றும்(1)
காதுடையோர்(2) இன்னிசையால் குயிலைத் தேர்வார்

அருங்கருணை ஆண்டவனின் அன்பைத் தேக்கி
அகமுவந்து நற்றமிழின் மக்க ளெல்லாம்

பெரும்பயனை அடைந்திடவே 'தேனீ' யென்னும்
பெயர்சூட்டித் தட்டச்சில் வார்த்தெ டுத்தே

ஒருங்குறியாம் 'யூனிக்கோ' டெழுத்தைத் தந்த
உமர்த்தம்பி வல்லவனை மறக்க லாமோ?

******

நற்குலமாம் 'வாவன்னா' குடும்பத் தோன்றல்
நாற்புலமும்(3) ஒருங்கிணைந்த அதிரைச் செல்வன்

(4)பொற்குணமுன் மாதிரியைக் கடைப்பி டித்துப்
புகழ்விரும்பாத் தன்மையிலே சேவை செய்தே

அற்புதமாம் தேனீயாய் மலர்த்தே னுண்டான்
அகிலத்தார் பலன்பெறவே கணினிக் கூட்டில்

உற்பவமாய்(5) இன்றமிழை இயங்கச் செய்த
உமர்த்தம்பி வல்லவனை மறக்க லாமோ?

******

இளமையிலே நுண்ணறிவைப் பெற்ற தம்பி
இயங்காத கருவிகளைப் பழுது பார்ப்பான்

எளிமையுடன் அடுத்துள்ள பட்டுக் கோட்டை
ஏகிடுவான்; அங்கவற்றை இயங்க வைப்பான்

களிகொள்வார் கருவிகளின் உடைமைக் காரர்
காசளித்தால் வாங்கமாட்டான்; நன்றி ஏற்பான்

ஒளிகொடுக்கும் முழுமதிபோல் பயனைத் தந்த
உமர்த்தம்பி வல்லவனை மறக்க லாமோ?

******

திறமையுடன் செயலாற்றி வறுமை போக்கத்
தேர்ந்தெடுத்தான் அமீரகத்தை; அங்கி ருந்து

மறுமையுடன் இம்மையையும் சேர்ந்து பெற்று
மகிழ்வோடு தன்வாழ்வை அமைத்து யர்ந்து,

பொறுமையுடன் நுண்ணறிவை வளர்த்துக் கொண்டு
புகழ்வாய்ந்த கணினிகளுள் புகுந்து மேய்ந்தான்

ஒறுமையிலாத்(6) தன்மையுடன் உயர்ந்து நின்ற
உமர்த்தம்பி வல்லவனை மறக்க லாமோ?

******

கடைந்தெடுத்த வெண்ணெயினைப்(7) பல்லோ ருக்கும்
காசில்லாக் கொடையாகக் கொடுத்த சீலன்

அடைந்ததுவோ உயிர்கொல்லிப் புற்று நோயாம்!
அதனைத்தான் பொறுமையுடன் சகித்து வந்தான்

குடைந்ததுநோய் அவனுடலை; இயன்ற மட்டும்
குணப்படுத்தச் சிகிச்சையெலாம் செய்து பார்த்தான்

உடைந்ததுவே (8)உயிர்ப்பானை! பாவம்! அந்த
உமர்த்தம்பி வல்லவனை மறக்க லாமோ?

******

அருஞ்சொல் விளக்கம்:

(1) கருநிறம் கொண்டிருப்பதால், குயிலும் காகமும் பார்வைக்கு ஒன்றாய்த் தோன்றும். அதுபோல், செயற்கரிய செய்த உமர்த்தம்பி, சாதாரணமானவர் அல்லர் எனும் உவமை எடுத்தாளப்பட்டுள்ளது.

(2) காதுடையோர் = இங்குக் 'காதுடையோர்' என்பது, குயிலிசைக்கு மயங்கி மகிழும் காதையுடையவர்கள் என்பதைக் குறிக்கும். எ.கா: திருக்குறளில், 'கண்ணுடையர் என்பவர் கற்றோர், முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்' எனும் பாட்டு இங்கு ஒப்பு நோக்கத் தக்கது. உண்மையில், கற்றோரே கண்ணுடையார் என்பது போல, காதால் குயிலிசையைக் கேட்பவரைக் காதுடையவர் என மிகைக் கூற்றாகக் கூறப்பட்டது.

(3) நாற்புலமும் = தமிழிலக்கியத்தின் நிலப் பகுப்புகளான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் (பாலையின்றி) ஆகிய நான்கு நிலப் பகுதிகளைத் தன்னகத்தே கொண்ட அதிராம்பட்டினம்.

(4) 'பொற்குண முன்மாதிரி' = பொன்னான நற்குணத்தின் தாயகம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 'பிறர் நலம் பேணும்' முன்மாதிரியைக் கடைப்பிடித்துச் செயலாற்றியவர்.

(5) உற்பவமாய் = கருக் கொள்ளச் செய்து

(6) ஒறுமையிலாத் தன்மை = யாரையும் வெறுக்காத தன்மை

(7) கடைந்தெடுத்த வெண்ணெய் = பால், தயிர், மோர், வெண்ணெய் ஆகிய நான்கு பரிணாமங்களைப் பெற்ற பின்னர்தான், 'வெண்ணெய்' எனும் அரும்பொருள் உருவாகும். அதுபோல், கணினித் துறையில் முயன்று பாடுபட்டு முன்னேறிப் பெற்ற பயனை (ஒருங்குறி எழுத்துருவை) தமிழுலகிற்கு இலவசமாகக் கொடுத்த கொடையாளி உமர்.

(8) உயிர்ப்பானை = மனித உயிர் மாயும் தன்மையுடையது என்பதைச் சுட்ட, 'உயிர்ப்பானை' எனும் உருவகம் இங்கு எடுத்தாளப்பட்டது.


- கவிஞர் அதிரை அஹ்மது

Monday, May 03, 2010

மீண்டும் ஒரு கோரிக்கை, தேனீ உமர்தம்பிக்கு அங்கீகாரம் கிடைக்குமா?

உமர்தம்பி அவர்களுக்கு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அங்கீகாரம் கிடைக்க மீண்டும் ஒரு வேண்டுகோள்.


இந்த செந்தமிழ் வேண்டுகோள் ஒலியை கேளுங்கள், நம் அதிரை உமர்தம்பி அவர்கள் எவ்வித சாதனைகள் செய்தார்கள், எவ்வகையில் கணினி தமிழுக்காக சேவை செய்தார்கள் என்பதை அழகான செந்தமிழ் நடையில் மிகத் தெளிவாக ஒலியாக்கம் செய்யப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை பதியுங்கள்.


 
 
இந்த வேண்டுகோள் ஒலியை உங்களின் வலைப்பூவிலும் பதியாலாம், இதற்கான அனுமதி இங்கே அனைத்துலக தமிழார்வலர்களுக்கு தருகிறேன். தொடர்புக்கு tjdn77@gmail.com

இதை எழுதி, ஒலியாக்கம் செய்து, நம்மை வெளியிட அனுமதியளித்த என் அருமை நண்பர் K.H.M.ஸதகத்துல்லாஹ்வுக்கு மிக்க நன்றி, மற்றும் தமிழார்வ நண்பர்களுக்கும் நன்றி.