Saturday, September 11, 2010

சிலருக்குத் தெரிந்தது; பலருக்குத் தெரியாதது.




தமிழ்த் தட்டச்சு முறையில் ஒரு பெரும் புரட்சியை (Revolution) அல்லது புத்தாக்கத்தை (Renaissance) ஏற்படுத்தியது,                              என் தம்பி (மர்ஹூம்) உமர் தம்பியின் 'யூனிகோடு' முறை என்று சொல்வதில் மிகையில்லை! தான் உருவாக்கியதை - கண்டுபிடித்ததை, 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' எனும் தமிழிலக்கிய மரபையொட்டி, தமிழுலகம் முழுமைக்கும் தனது அருங்கொடையாக அளித்தார் இச்செம்மல்! இந்த நன்றியுணர்வுதான்,

"நற்குலமாம் 'வாவன்னா' குடும்பத் தோன்றல்
       நாற்புலமும் ஒருங்கிணைந்த அதிரைச் செல்வன்

பொற்குணமுன் மாதிரியைக் கடைப்பி டித்துப்
     புகழ்விரும்பாத் தன்மையிலே சேவை செய்தே

அற்புதமாம் தேனீயாய் மலர்த்தே னுண்டான்
           அகிலத்தார் பலன்பெறவே கணினிக் கூட்டில்

உற்பவமாய் இன்றமிழை இயங்கச் செய்த
       உமர்த்தம்பி வல்லவனை மறக்க லாமோ?"


இன்று, இந்த 'யூனிகோடு' முறையைப் பின்பற்றாத தளமே இல்லை என்னுமளவுக்குப் பெரும்பாலான அனைத்துலகத் தமிழ் இணைய தளங்கள் இம்முறையைப் பின்பற்றிப் பயன்பெற்று வருகின்றன. அண்ணன் - தம்பி உறவு முறையில் இருந்தும், ஒரே ஊரில் பிறந்தும், ஒன்றாகவே வாழ்ந்தும், என் ஆக்கங்களை தட்டச்சாளர் உதவியின்றி நானே பதிவு செய்துகொள்ள முடியாமல் இருந்தேன். அப்போதுதான், என் தமிழ்ப் பேராசிரியர், 'இறையருட்கவிமணி' கா. அப்துல் கபூர் அவர்களின் திருமகனார் அன்புத் தம்பி ஜமால் அவர்கள் எனக்கு தம்பி உமர் தம்பியின் பங்களிப்பில் உருவான (தமிழா ஈ கலப்பை, AWC phonetic unicode writer) இந்த யூனிகோடு தமிழ் தட்டச்சு முறைகளை அறிமுகம் செய்து வைத்தார்.

அன்றிலிருந்து இன்றுவரை, ஏறத்தாழ ஆயிரம் பக்கங்கள் வரை, இம்முறையைப் பின்பற்றித் தட்டச்சு செய்து பயன் பெற்றுள்ளேன். இந்தப் பட்டறிவின் பயனாக, நம் நண்பர்கள் இம்முறையில் செய்யும் பிழைகளைச் சுட்டிக் காட்டவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இக்கட்டுரையை வரையத் தொடங்கினேன்.

'குர்ஆன்' என்று தட்டச்ச வேண்டுபவர்கள், kuraan அல்லது quran என்று பதிவார்கள். அப்போது அது 'குரான்' என்று பதியும்; அல்லது 'ஃஉரன்' என்று பதியும். இதனைச் சரியாகப் பதிய வேண்டுமாயின், kur என்பதற்குப் பிறகு ஓர் இடைவெளியை விட்டுப் பின்னர் aan எனப் பதிந்ததன் பின்னர், இரண்டிற்கும் இடையில் இருக்கும் இடைவெளியை back space செய்தால், அது 'குர்ஆன்' என்று அமைந்துவிடும். 'அப்பாடா! இதற்கு இவ்வளவு விளக்கம் தேவையா?' என்கிறீர்களா? சற்றுக் கூடுதலாகவே தோன்றினாலும், பழக்கத்தில் வரவேண்டும்; வந்துவிட்டால், பிறகு இலகுவாகிவிடும் என்பதே எனது எண்ணம்.

'அண்ணன்-தம்பி' என்று இடைவெளி இல்லாமல் பதியும்போது, 'அண்ணந்தம்பி' என்று பதிவாகும். இதனைப் போக்க இரண்டு சொற்களுக்கும் இடையில் ஒரு இடைவெளி விட்டுப் பதிந்து, பின்னர் back space செய்தால் சரியாகிவிடும். இதில் இன்னொரு பிரச்னை! அதாவது, சில சிஸ்டங்களில் அந்த இடைக்கோடு, 'எ' என்றாகிவிடும். அதை மீண்டும் இடைக்கோடாகத் தட்டச்சு செய்தால் சரியாகிவிடும்.

'தங்கம்' என்று எழுத thangam என்று தட்டச்சுவார்கள். அப்படிச் செய்தால், 'தங்அம்' என்று வரும். இதனைச் சரி செய்ய, thangkam என்று தட்டச்சினால், 'தங்கம்' என்று சரியாக அமைந்துவிடும்.

நண்டு, மண்டு, குண்டு என்றெல்லாம் தட்டச்சும்போது, அது தானாகவே சரியாக அமைந்துவிடும். அன்றி, அது 'ன்டு' என்று பதியாது. 'n' என்ற எழுத்துக்குப் பிறகு 'd' வந்தால், அது தானாகவே 'ண்' என்ற முச்சுழி எழுத்தாகிவிடும். இது, யூனிகோடின் இயல்பாய் அமைந்த தன்மையாகும்.

'ர'கர, 'ற'கர வேற்றுமைகளையும், 'ல'கர, 'ள'கர, 'ழ'கர வேறுபாடுகளையும் தெரியச் சற்றே மொழிப்புலமை வேண்டும். la என்று அடித்தால் 'ல'கரமாகும். Shift 'L' அடித்தால் 'ள்' ஆகும். za அடித்தால் 'ழ'வாகிவிடும்.

Shift 'S' அடித்தால் 'ஸ்' ஆகும். 'sh' அடித்தால் 'ஷ்' ஆகும்.

'கஃபன்' என்பதற்கு, kaqpan என்று அடிக்கவேண்டும். fa உச்சரிப்புக்கு இதுதான் முறை.

'ai' அடித்தால், 'ஐ' ஆகும். 'மை' என்பதற்கு, 'mai' என்று அடிக்கவேண்டும். 'y' என்ற எழுத்து, 'ய'கர ஒற்றாகும்.

ஷிஃப்ட் R அடித்தால் 'ற்' என்றும், ஷிஃப்ட் N அடித்தால் 'ண்' என்றும், ஷிஃப்ட் L அடித்தால் 'ள்' என்றும், ஷிஃப்ட் X அடித்தால் 'ஞ்' என்றும், ஷிஃப்ட் S அடித்தால் 'ஸ்' என்றும் விதிவிலக்குகளாகப் பதியும். இவையன்றி, பெரும்பாலான capital எழுத்துகளுக்கு அதனதன் நெடில்கள் அமையும்.

இப்படியாகப் பலவற்றைக் குறிப்பிட்டுக் காட்டிக்கொண்டே போகலாம். 'சித்திரமும் கைப் பழக்கம்' என்பது போல, தொடர்ந்து இதில் கவனம் செலுத்தினால், விரைவாகவும் நிறைவாகவும் இதில் முன்னேற்றம் அடையலாம். இவையெல்லாம் எனது பட்டறிவில் பட்டவையே. அதில் இடம்பெறாத இன்னும் பல நுணுக்கங்களும் இருக்கலாம். அவற்றை இத்துறை விற்பன்னர்கள் விளக்குவார்கள். சிலர் எழுதும் எழுத்தோவியங்களும் பின்னூட்டங்களும் சில பிழைகளுடன் காணப்படுவதால், இக்கட்டுரைக்கு, 'சிலருக்குத் தெரிந்தது; பலருக்குத் தெரியாதது' என்று தலைப்பிட்டேன். நானே இந்த மென்பொருளில் கற்கவேண்டிய விளக்கங்கள் இன்னும் நிறைய இருக்கக் கூடும். அவற்றை வாசகர்கள் தங்களின் பின்னூட்டங்களில் பகிர்ந்துகொள்வார்கள் என்று நம்புகின்றேன்.

-- அதிரை அஹ்மது
 
தமிழ் தட்டச்சு செய்ய உமர்தம்பி அவர்களின்  AWC PHONETIC UNICODE WRITER,
 
தமிழ் தட்டச்சுக்கு tamil phonetic key board எழுத்துக்கள் உதவி

Wednesday, July 14, 2010

தமிழ் கணினி அறிஞர் "உமர்தம்பி" அரங்க நிகழ்ச்சிகள் part -1

சமீபத்தில நடந்து முடிந்த தமிழ் இணைய மாநாட்டில் தமிழ் கணினி அறிஞர் "உமர்தம்பி" அவர்களின் பெயரிட்ட அரங்கத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சிகளை இங்கு கண்டு ரசிக்கலாம்.

1



2



3



4



5



தமிழ் இணைய மாநாட்டில் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சிகளை படம்பிடித்து YOUTUBEல் வெளிட்டவருக்கு மிக்க நன்றி.

Sunday, June 27, 2010

உமர்தம்பிக்கு விருது - புதிய புகைப்படங்கள் பகுதி - 2

சிங்கப்பூர் தமிழ் அறக்கட்டளை சார்பாக தமிழ் இணைய மாநாட்டில் அதிரை உமர்தம்பி அவர்களுக்கு 'தமிழ் கணினி அறிஞர்' என்ற விருது' வழங்கப்பட்ட செய்தி, மற்றும் புகைப்படங்கள் முந்தைய பதிப்பில் பார்த்தோம். இதோ மேலும் புகைப்படங்கள்

அதிரை உமர்தம்பிக்கு விருது வழங்கப்படும் முன்பு உமர்தம்பி அவர்களின் தமிழ் இணைய சேவை பாராட்டி உமர்தம்பி அவர்களின் குடும்பத்தவர்களை கவுரவிக்கும் புகைப்பட காட்சிகள்.

மேலும் புதிய புகைப்படங்கள் நம் வலைப்பூவில்  விரைவில் வெளியிடப்படும், தொடர்ந்து இணைந்திருங்கள்.

புகைப்படம் உதவி செய்த சகோதரர் கோவை சஞ்சய் காந்திக்கு நன்றி.

மேலும் புகைப்படங்கள் இன்னும் தெளிவாக பார்க்க அதிரைநிருபர் வலைப்பூவிற்கு சென்று பாருங்கள்.

Saturday, June 26, 2010

உமர்தம்பிக்கு விருது - புதிய புகைப்படங்கள் பகுதி - 1

கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் நடக்கும் தமிழ் இணைய மாநாட்டில் அதிரை உமர்தம்பிக்குதமிழ் இணைய அறிஞர்’ என்ற விருது இன்று மாலை 6:00 வழங்கப்பட்டது.

சிங்கப்பூர் தமிழ் அறக்கட்டளை சார்பாக இவ்விருது வழங்கப்பட்டது, தமிழ் இணைய உலகில் பிரபல்யமான தமிழ் இணைய ஆர்வளர் திரு.பாலா பிள்ளை அவர்கள் விருதை வழங்கினார்கள், உமர்தம்பி அவர்களின் மூத்த சகோதரர். அப்துல் காதர் அவர்களும், உமர்தம்பி அவர்களின் மூத்த மகன் மொய்னுதீனும் விருதை பெற்றுக் கொண்டனர்.


உமர்தம்பி அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்த சிங்கப்பூர் தமிழ் சங்கத்திற்கு எங்கள் மனமார்ந்த நன்றி.
புகைப்படம் உதவி செய்த சகோதரர் கோவை சஞ்சய் காந்திக்கு நன்றி.

மேலும் புகைப்படங்கள் இன்னும் தெளிவாக பார்க்க அதிரைநிருபர் வலைப்பூவிற்கு சென்று பாருங்கள்.


உமர்தம்பிக்கு விருது வழங்கப்பட்டது

கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் நடக்கும் தமிழ் இணைய மாநாட்டில் அதிரை உமர்தம்பிக்கு ‘தமிழ் இணைய அறிஞர்’ என்ற விருது இன்று மாலை 6:00 வழங்கப்பட்டது.
                                                                                                                      
சிங்கப்பூர் தமிழ் அறக்கட்டளை சார்பாக இவ்விருது வழங்கப்பட்டது, தமிழ் இணைய உலகில் பிரபல்யமான தமிழ் இணைய ஆர்வளர் திரு.பாலா பிள்ளை அவர்கள் விருதை வழங்கினார்கள், உமர்தம்பி அவர்களின் மூத்த சகோதரர். அப்துல் காதர் அவர்களும், உமர்தம்பி அவர்களின் மூத்த மகன் மொய்னுதீனும் விருதை பெற்றுக் கொண்டனர்.

உமர்தம்பி தம்பி அவர்களின் மகனும், சகோதரரும் துணை முதல்வர் மான்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்களை சந்தித்தார்கள், உமர்தம்பி அவர்களின் தமிழ் சேவையை துணை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பாராட்டினார்கள், உமர்தம்பிக்கு அங்கீகாரம் தர தம்மிடம் நிறைய கோரிக்கைகள் வந்தாகவும் துணை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கூறினார்கள்.

மேலும் விபரங்கள் புகைப்படங்களுடன் விரைவில் வெளியிடப்படும்.
தொடர்ந்து இணைந்திருங்கள்.