தமிழ் இணையக் கடலில் பழைய, புதிய வலைப்பதிவாளர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த காலம் சென்ற யுனிகோட் உமர்தம்பி அவர்கள் யுனிகோட் பற்றி எழுதிய கட்டுரை அவர்களின் நினைவாக மீள் பதிவு செய்கிறேன்.
யுனிகோடு – என் பார்வையில்
யுனிகோடு பற்றி பேசுபவர்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம்.
1. யுனிகோடு வேண்டும்
2. யுனிகோடு வேண்டாம்
3. யுனிகோடு கடினமானது
இதில் எது சரி?
இன்றைய பாவனையில் இருக்கும் யுனிகோடை எந்தவகையில் சேர்ப்பது?
அது பற்றி அலசப்படுவது சரியான வகையில் அதைப் புரிந்து கொள்ள உதவியிருக்கிறதா? இவைகளைப் பற்றி என் கருத்துக்களைச் சொல்வதற்கு முன் யுனிகோடு என்ற ஒன்று ஏன் தேவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
முதலில் தமிழில் கணினிப் பயன்பாட்டையும் அதில் எழுதப்படும் ஆக்கங்களைப் பற்றியும் ஒரு சிந்தனை வேண்டும். சமீப காலங்களில் நிறையவே தமிழில் ஆக்கங்கள் எழுதப்பட்டிருக்கின்றன; எழுதப் பட்டுக் கொண்டிருக்கின்றன. அவை உலகலாவிய அளவில் பரிமாறப் பட்டுக் கொண்டிருந்தாலும் ஒரு குழுவுக்குள் ஏற்படுத்திக் கொண்ட வரைமுறையின்படியே (என்கோடிங்) அமந்திருப்பதால அதை ‘உலகலாவியது’ என்று கூற இயலாது. பல மொழிகள் முன்பே இம்மாதிரியான முறைப் படுத்தப்பட்டு உலகலவில் பதிவு செய்யப்பட்ட வரைமுறைகளைக் (code pages) கொண்டுள்ளன. ஆனால் உலகலாவிய மொழிகளுக்கெல்லாம் ஒரே விதமான தரத்தைக் கொண்டுவந்துவிட்டால் இதுவரை பட்டியலில் சேராத புதியனவாக இருந்தாலும் அல்லது பழையனவாக இருந்தாலும் எக்காலத்திலும் எப்பகுதியிலும் எல்லோராலும் கையாளப்படும் அல்லவா?. இன்றைய உலகம் தகவல் அமைப்புக்களால் பிணைக்கபட்டிருப்பதால் இம்மதிரியான உலகம் முழுமைக்குமான ஒரு தரம் தேவையாய் இருக்கிறது. இதைத் தருவதுதான் யுனிகோடு.
ஆக, யுனிகோடு என்ற ஒன்று வேண்டும் என்பது தெரிகிறது. ஆனால் அதற்கு ஆதரவும் இருக்கிறது; எதிர்ப்பும் இருக்கிறது. இதற்கு ஆதரவு காட்டுவோர் சில அடிப்படைகளை வைத்து விவாதிக்கின்றனர்:
உலகலாவிய குறியீடு- தரப்படுத்தப்படாத குறியீடுகளில் ஆக்கங்களை எழுதிக் குவித்து ஆங்காங்கே தேங்கி நிற்பதில் எந்த இலாபமும் இல்லை. மேலும் வேண்டும்போது தேடியெடுக்கும் ஒரு தகுமான பொறியும் இல்லை. இதற்கிடையில் பல்வேறு குறியீடுகளை அவரவர் விருப்பத்திற்குச் செய்து, செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் ஓர் அரிய வாய்ப்பையே சிதைத்துவிடுகின்றனர். ஆக நாம் முன்னேறிச் செல்ல யுனிகோடு ஒன்றுதான் வழி.
இனி, யுனிகோடு வேண்டாம் என்று சொல்வோரை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று சில காரணங்களுக்காக வேண்டாம் என்று சொல்பவர். இரண்டு “அது புதியதாகவுள்ளதே, சில நேரம் வேண்டாத சிக்கல் நேருவதுபோல் தோன்றுகிறதே; இப்போதிருப்பதில் என்ன குறை?” என்று வினவி, அதைத் தொட மனமில்லாமலே தூர நிற்பவர்.
நம்மிடையே உள்ள பெரிய குறை, உண்மையை நோக்குவதைவிட கட்சி சார்ந்து கொள்வது. எனவேதான் யுனிகோடே வேண்டும் என்று ஒரு குழுவும், ஒரேடியாக வேண்டாம் என்ற ஒருபுறமும் கோஷம் எழுப்புகின்றன.
உலகலாவிய தரத்தில் தமிழுக்கும் இடம்வேண்டும் என்பதில் எத்தரப்பாருக்கும் இரண்டாம் கருத்தில்லை. ஆனால் அது எப்படி செயலபடுத்தபட்டது என்பதில்தான் கருத்து வேறுபாடு. இந்திய மொழிகளை யுனிகோடில் சேர்க்க முனைந்தபோது “இந்திய மொழிகள்” என்ற ஒரு கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டதுதான் இந்த சிக்கலுக்கெல்லாம் மூல காரணம். ஒவ்வொரு இந்திய மொழியும் அதிலும் குறிப்பாக தமிழ், எழுதுவதிலும் கையாளப்படுவதிலும் தனக்கே உரிய சில பண்புகளைக் கொண்டுள்ளது. இப்படி இந்தியாவில் பேசப்படும் மொழிகளை “இந்திய மொழி” என்ற ஓர் அலகுக்குள் அடக்கி, அதன் சிறப்புதனமை சிதைந்துவிடக் காரணமாகிவிட்டதே என்பதுதான் அங்கலாய்ப்பு. இவ்வாறு இந்திய மொழிகளை யுனிகோடிற்குக் கொண்டுவரும்போது அது தொடர்பானர்வர்கள் சரியான பங்களிப்பைச் செய்யவில்லை என்பதுதான் குற்றச்சாட்டு. மேலும் தமிழுக்காகத் தரப்பட்ட இடம். உயிரெழுத்துக்களுக்கும் உயிர்மெய்யெழுத்துக்களும் தவிர வெறு சில பொந்துகள் – இவைதான் ஒதுக்கப்பட்ட இடங்கள். அடிப்படையில் தமிழ் எழுத இவை போதுமென்றாலும் எல்லா எழுத்துக்களையும் யுனிகோடில் உள்ளடக்குவதால் எந்தப் பிழையும் இல்லை என்பதல்லாமல் அது நன்மை பயப்பதாகவே அமையும். குறிப்பாக மெய்யெழுத்துக்களுக்கு (எ.கா: க்) இரண்டு இடங்கள் பிடிகின்றனவே அது ஒன்றாகிவிடும். மேலும் தேடுபொறி அமைப்பை எளிதாக்கும். எடுத்துக் காட்டாக “பல” என்பதைத் தேடினால் “பல்” என்பது சேர்ந்தே வரும். காரணம் “பல்” என்பது “ப+ல+[புள்ளி]” கொண்டதாகும் இந்த அமைப்பில் முதல் இரண்டு எழுத்துக்களும் சேர்ந்து “பல” என்று ஆகிவிடுவதால் தேடும்போது “பல” என்பதோடு “பல்” உம் சேர்ந்து வரும். “ல்” என்பது ஓர் எழுத்தாக அமையுமானால் “ல” உம் “ல்” உம் வேறுபடுத்திக் காணப்படும். அது மட்டுமல்ல வரிசைப் படுத்துவதிலும் மேலதிகமான சிக்கல் இருக்காது.
ஆனால் மேற்சொல்லப்பட்ட வலுவான காரணங்களில்லாமல் வெறுனனே “யுனிகோடா?… தூ..தூ..” என்பவர்களை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். இடம் அதிகமாகப் பிடிக்கும் என்பது ஒரு காரனமாக இருந்தாலும் இன்றைய நிலையில் இடம் என்பது ஒரு பொருட்டல்ல.
இவ்வளவு இடர்பாடுகளை வைத்துக்கொண்டு யுனிகோடிற்குப் போக வேண்டுமா? ஆமாம்; போகத்தான் வேண்டும். காரணம் இந்த உண்மைகள் இப்போது வெளியில் பேசப் படுவது வெகு காலம் தாழ்த்தித்தான். இந்த ஆய்வுகள் முன்னரே நடக்கப் பெற்று தீர்வு கண்டிருக்க வேண்டும். இப்போது எல்லா செயலிகளும் யுனிகோடை அடிப்படையாக வைத்துதுத்தான் வருகின்றன. புதுச் செயலிகளை உருவாக்குவோருக்கு பன்மொழி பயன்பாடிற்கு அவர்களின் செயலிகளைத் தருவது எளிதாகிறது. இப்போது நாம் இதில் இடம்பிடிக்க வில்லையானால் நாம் வெகு தூரத்தில் பின்னிற்கு நிற்போம். இனி யுன்கோடில் பெரிய திருத்தம் வராது என முடிவாகிவிட்டது. ஒருவேளை அப்படியரு மாற்றம் நாம் முன்னெ சொன்னபடி வருவதானால் அது வருடங்கள் பிடிக்கும். நாம் பின்னே நிற்கப்போவது நிச்சயம். ஆகையால் சில சிக்கல்களை எதிர்கொண்டு யுனிகோடைப் பயன்படுத்தி ஆகவேண்டியிருக்கிறது. கடினமாக இருந்தாலும் நம் கணிஞர்கள் சிக்கலுக்குத் தீர்வு காணாமல் இருக்க மாட்டார்கள்.
நாம் குடியிருக்கப் போகும் வீடு, நாம் விரும்பியாவாறு இல்லாதிருக்கலாம். ஒருசில ஓட்டை உடைசல்களுடன் இருப்பதால் எனக்கு வீடே வேண்டாமென்று இருப்பது எப்படிச் சரியாகும்?
ஆக்கம்: உமர் தம்பி,
நன்றி: எழில் நிலா .காம்
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ் கணினித்துறையில் தன்னலமற்ற சேவைகள் செய்த உமர் தம்பிக்கு அங்கீகாரம் கிடைக்குமா?
கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மீண்டும் உமர்தம்பி அவர்களின் மற்றும் ஒரு கட்டுரையில் சந்திக்கிறேன்.